பாகிஸ்தானின் கனவை கலைத்த மழை: இன்றைய ஆட்டமும் இரத்து!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டமும் மழைக் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் தொடர்ச்சியாக கடும் மழை பெய்ததால், ஒரு பந்துக் கூட வீசாத நிலையில் நான்காம் நாள் ஆட்டம் இரத்து செய்யப்பட்டது.
நேற்றைய தினமும் 5.2 ஓவர்கள் வீசிய நிலையில், தொடர்ச்சியாக மழை பெய்ததால் நேற்றைய ஆட்டமும் இரத்து செய்யப்பட்டது.
கடந்த 11ஆம் திகதி ராவல்பிண்டியில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி, தற்போது வரை 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 282 ஓட்டங்களை பெற்றுள்ளது.
களத்தில் தனஞ்சய டி சில்வா 87 ஓட்டங்களுடனும், தில்ருவான் பெரேரா 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது உள்ளனர்.
இன்னமும் முதல் இன்னிங்சே முடிவடையாத நிலையில், போட்டி முடிவடைவதற்கு இன்னமும் ஒருநாள் மட்டுமே உள்ளது. ஆகையால் இப்போட்டி சமநிலையில் முடிவடையவுள்ளது.
இதில் இலங்கை அணி சார்பில், திமுத் கருணாரத்ன 59 ஓட்டங்களையும், ஒசேத பெனார்டோ 40 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 10 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேலும், அஞ்சலோ மெத்தியூஸ் 31 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 2 ஓட்டங்களையும், நிரோஷன் டிக்வெல்ல 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், ஷாயீன் அப்ரிடி மற்றும் நயீம் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மொஹமட் அப்பாஸ் மற்றும் உஸ்மான் ஷின்வாரி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தியுள்ளனர்.