பயங்கரவாதி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேகநபர்களை தொடர்ந்த விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த வழக்கு, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் றிஸ்வான் முன்னிலையில் காணொளி தொடர்பாடல் மூலம் இடம்பெற்ற நிலையில் சந்தேகநபர்களை வரும் நவம்பர் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த விசாரணையின்போது மேலதிக அறிக்கைகள் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்ப் பகுதியொன்றில் வைத்து கடந்த வருடம் மேற்குறித்த 12 சந்தேகநபர்களும் கைதாகியிருந்தனர்.
கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாசீம் தலைமையில் பல்வேறு இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 26 அன்று அம்பாறை, சாய்ந்தமருது பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் குறித்த அமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டதுடன் பலர் விளக்கமறியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.