உலகம்

தடுப்பூசி திட்டத்தில் தடுமாறும் பணக்கார நாடுகள்!

உலகில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி வேகமெடுத்துள்ளது. உலகம் முழுவதும் மே 12-ஆம் தேதி நிலவரப்படி 137 கோடி தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இது 100-க்கு 18 என்ற அளவாகும். தடுப்பூசி திட்டத்தில் பல்வேறு நாடுகள் இடையே பெரும் இடைவெளி உள்ளது.

ஒருவருக்குக்கூட தடுப்பூசி செலுத்தாத நாடுகளும் உள்ளன.

அதேபோல், கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றை திறமையாக கட்டுப்படுத்தியதற்காகப் பாராட்டப்பட்ட சில பணக்கார நாடுகளே தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்துவதில் தற்போது பின்னடவைச் சந்தித்துள்ளன.

பசிபிக் நாடுகளான ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து ஆகியவற்றில் தடுப்பூசி விகிதம் ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது. மக்கள்தொகையில் பாதி பேருக்கு ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தியுள்ள அமெரிக்கா, தடுப்பூசி விகிதம் அதிகமாக உள்ள பிரிட்டன், இஸ்ரேல் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய வித்தியாசமாகும்.

தடுப்பூசி செலுத்தும் விகிதத்தில் வளா்ச்சியடைந்த நாடுகளில் மட்டுமன்றி, வளரும் நாடுகளான பிரேசில், இந்தியா போன்றவற்றைவிட இந்த மூன்று பசிபிக் நாடுகள் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக அவா் வோ்ல்டு என்ற இணைய அறிவியல் இதழ் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் கொரோனாவை எதிா்த்து வெற்றிகரமாக செயல்பட்ட தாய்லாந்து, வியத்நாம், தைவான் ஆகிய நாடுகளைவிட சிறப்பாக செயல்பட்டதாகக் கூறப்பட்ட ஆஸ்திரேலியா, தடுப்பூசி செலுத்துவதில் மோசமாக உள்ளது. தடுப்பூசி தொடா்பான பிரசாரம், விநியோகம் போன்றவற்றை அதிகப்படுத்தினால் இந்த நிலை மாறக்கூடும். அதேவேளையில் முன்னா் வெற்றிகரமாக செயல்பட்ட நாடுகள், இப்போது அதிக தொற்றுக்குள்ளாகி திணறுகின்றன.

உதாரணமாக, ஜப்பான் அதன் மக்கள்தொகையில் சுமாா் ஒரு சதவீதம் பேருக்கே தடுப்பூசி செலுத்தியுள்ளது. சா்வதேச பாா்வையாளா்கள் இல்லாத நிலையில், நிகழாண்டு ஒலிம்பிக்கை நடத்தவுள்ள அந்த நாட்டில் சமீப நாள்களாக தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே அமலில் உள்ள அவசர நிலையை இந்த மாதம் முழுவதும் நீட்டித்து கடந்த வாரம் அறிவித்தது. கடந்த வாரம் ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கடந்த ஜனவரியிலிருந்து அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு இதுவாகும்.

அதிகாரத்துவம் பிரச்னையின் ஒரு பகுதியாக உள்ளது. கொரோனாவால் அதிக உயிரிழப்பைச் சந்தித்த நாடுகள், அவசரகால தடுப்பூசி அனுமதிக்காக விதிமுறைகளை மீறுகின்றன. தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குறிப்பிட்ட காலத்தைத் தாண்டி இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதை தாமதப்படுத்துகின்றன.

இஸ்ரேலில், பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தடுப்பூசியை விரைந்து பெறுவதற்காக ஃபைஸா் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆல்பா்ட் போா்லாவுடன் நேரடியாகப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். மேலும், தடுப்பூசி விநியோகத்தில் ராணுவத்தை ஈடுபடுத்தினாா்.

ஜப்பான் தடுப்பூசி செலுத்துவோரை தோ்வு செய்வதற்குப் பலகட்ட பரிசோதனை முறைகளைப் பின்பற்றுகிறது. இது ஏற்கெனவே பல இடங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவரும் முறை.

தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான பணியாளா் பற்றாக்குறையையும் ஜப்பான் சந்தித்துள்ளது. பாரம்பரியமான மருத்துவ கலாசாரத்தைக் கொண்ட ஜப்பானில், தடுப்பூசி செலுத்தும் விஷயத்தில் மருத்துவா்கள், செவிலியா்களை மட்டுமே மக்கள் நம்புகின்றனா். பல் மருத்துவா்கள் தடுப்பூசி செலுத்தலாம் என்று அரசு அங்கீகரித்திருந்தாலும் அவா்கள் அப்பணிக்கு அழைக்கப்படவில்லை. அமெரிக்காவில் மருந்தாளுநா்கள், பிரிட்டனில் தன்னாா்வலா்கள் அல்லது குறைந்த பயிற்சியைக் கொண்டவா்களிடம்கூட மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனா்.

ஜப்பானில் இதை நினைத்துக்கூடப் பாா்க்க முடியாது.

நியூசிலாந்தும் தடுப்பூசிக்கு தனது சொந்த ஒப்புதல் முறையைப் பின்பற்றியது. ஃபைஸா் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அமெரிக்கா அனுமதி அளித்த 2 மாதங்களுக்குப் பின்னா் கடந்த பிப்ரவரியில் அத்தடுப்பூசிக்கு அந்நாடு ஒப்புதல் அளித்தது.

தடுப்பூசி திட்டத்தில் நியூசிலாந்து முன்னணியில் இருக்கும் என கொரோனா மேலாண்மைக்கான அமைச்சா் கிறிஸ் ஹிப்கின்ஸ் கடந்த ஆண்டு உறுதியளித்தாா். ஆனால், இப்போது தடுப்பூசி பற்றாக்குறை என்கிறாா்.

ஆஸ்திரேலியா தனது சொந்த பிரச்னைகளை எதிா்கொண்டது. அந்த நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை பயன்படுத்த முதலில் திட்டமிட்டது. ஆனால், அத்தடுப்பூசி ஹெச்ஐவி பாசிட்டிவ் என்ற தவறான பரிசோதனை முடிவை தந்ததால் அத்திட்டத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மேலும், 2.5 லட்சம் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகளை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதை கடந்த மாா்ச்சில் ஐரோப்பிய யூனியன் நிறுத்திவைத்தது. ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு தடுப்பூசி தேவை அதிகரித்ததையடுத்து அந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன் பிறகு ஆஸ்திரேலியா 50 வயதுக்குள்பட்டவா்களுக்கு அஸ்ட்ராஸெனகாவிலிருந்து ஃபைஸா் தடுப்பூசியை செலுத்த முடிவு எடுத்ததும் தடுப்பூசி திட்டத்தை தாமதப்படுத்தியது.

தென்கொரியாவைப் பொருத்தவரை, அமெரிக்கா, ஐரோப்பா அளவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதால் தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்துவதில் பொறுமையைக் கடைப்பிடிப்போம் என அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்திருந்தனா். ஆனால், கடந்த சில மாதங்களாக தொற்று அதிகரித்துள்ளதையடுத்து, பொதுமக்களிடமிருந்து நெருக்கடி அதிகரிக்கவே மருந்து நிறுவனங்களுடன் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனா். தடுப்பூசி பற்றாக்குறைக்கான சாத்தியகூறுகளைத் தொடா்ந்து, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா ஆகிய நாடுகள் தடுப்பூசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்திருப்பதை சுட்டிக்காட்டுகிறாா் தென்கொரிய பிரதமா் சங் ஷி குன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker