பனங்காடு வைத்தியசாலையின் வைத்தியர் மீது தாக்குதல் : இன்றைய தினம் பணி பகிஷ்கரிப்பில் வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள்!

அம்பாரை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச பனங்காடு வைத்தியசாலை மருத்துவர் நேற்றயதினம் அளிக்கம்பையில் வீடு ஒன்றில் வெடி வெடித்ததில் படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்களால் தாக்கப்பட்டார்.
மேலும் தெரியவருவதாவது, நேற்றய தினம் (17) செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் அம்பாரை மாவட்ட அளிக்கம்பை பிரதேசத்தில் வெடி வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி இருவரும் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் படுகாயமடைந்த இருவரையும் முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு உறவினர்களால் பனங்காடு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பனங்காடு வைத்தியசாலையில் போதிய வசதிகள் இன்மையினால் மேலதிக சிகிச்சைகளுக்காக (சத்திர சிகிச்சை போன்ற) அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலைக்கு அனுப்பிவைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது படுகாயமடைந்தவர்களின் உறவினர்களினால் பனங்காடு வைத்தியசாலையின் கடமையில் இருந்த வைத்தியர் தகாத சொல்பிரயோகத்ததினால் பேசப்பட்டு மேலும் தாக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் தாக்கப்பட்டதை தொடர்ந்து இன்றைய தினம் பணி பகிஷ்கரிப்பில் சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பிரதான வைத்தியசேவை வழங்கும் பனங்காடு வைத்தியசாலையானது கொவிட் நோயாளர்கள் வைத்தியம் பெறும் இடமாகவும் மாற்றம் பெற்றுள்ளது. இந்த வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை, பௌதிகவளம் பற்றாக்குறை, சுகாதார சிற்றுளியர்கள், சிற்றுளியர்கள் பற்றாக்குறை நிறைந்ததாக காணப்பட்ட போதிலும் இதுவரையில் சிறந்த வைத்திய சேவை வழங்கி வந்த நிலையில் வைத்தியர் தாக்கப்பட்ட சம்பவம் மிக வேதனையை அளிப்பதாக பனங்காடு வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் தெரிவித்தார்கள்.