பனங்காடு பிரதேச வைத்தியசாலை திங்கட்கிழமை மீள திறக்கப்படும் : பல தரப்பு முயற்சிகளால் கிடைத்த தீர்வு….முழு விபரம்….

-கிரிசாந் மகாதேவன்-
அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் அலிக்கம்ப பிரதேசத்தில் இருந்து சிகிச்சைக்காக வந்த சிலருக்கும் அங்கு சேவையாற்றும் வைத்தியருக்குமிடையில் இடம்பெற்ற முரண்பாடு காரணமாக அங்கு பணியாற்றும் வைத்தியர் ஒருவர் தாக்கப்பட்டதனால் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து பணிக்கு வராமை காரணமாக நான்கு நாட்களாக வைத்தியசாலை பூட்டப்பட்ட நிலையில் உள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பிரதான வைத்திய சேவை வழங்கிவருகின்ற பனங்காடு பிரதேச வைத்தியசாலை மூடப்பட்டு இருந்தமை காரணமாக மருத்துவ சேவைக்காக அளிக்கம்பை, கண்ணகிபுரம், கவடாப்பட்டி போன்ற தூர பிரதேசங்களில் இருந்து பொதுமக்கள் மருத்துவ சேவையை பெற்றுக்கொள்ள பணத்தை செலவுசெய்து வாடகைகளுக்கு வாகனங்களை பெற்று வருகைதந்த போதிலும் மருத்துவசேவை வழங்குவதற்கு எவரும் இல்லாத நிலையில் ஏழைமக்கள் பலர் மிகவும் சிரமத்துக்குள்ளாகி நோயுடன் மீண்டும் வீடுகளுக்குச் திரும்பிச்செல்லும் அவலநிலை ஏற்பட்டது.
இவ்வாறு பொதுமக்கள் பாதிக்கப்படுவதனை உணர்ந்த சமூக நலன் விரும்பிகளும், பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரும் தொடர்சியாக அதிர்த்தி தெரிவித்து வைத்தியசாலையின் வைத்திய சேவையை மீள ஆரம்பிக்க செய்வதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு இருந்தார்கள்.
இதன் பயனாக இன்று (21) அரசியல் பிரதிநிதிகளுக்கும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு. சுகுணனுக்குமிடையிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.
பா.உ சிவ.சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்கள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு. சுகுணன் அவர்களை தொடர்வு கொண்டு ஒருநபர் செய்த தவறிற்காக அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதனை ஏற்க முடியாது வைத்தியசாலையினை விரைவில் திறப்பதற்கு வழிவகை செய்யுமாறும் கலந்துரையாடி இருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு. சுகுணனை சந்தித்து அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் தாக்கப்பட்ட விடயத்திற்கு தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர்.
இவ்விடயமானது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இருந்தாலும் அசாதாரண காலப்பகுதியான இந்த காலப்பகுதியில் பனங்காடு பிரதேச மக்களின் நன்மை கருதி வைத்தியசாலையை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மற்றும் மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் நேரில் சென்று கோரிக்கை முன்வைத்தனர்.
மேலும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் அவர்கள் தொலைபேசி மூலமாக குறித்த விடயம் தொடர்வாக உயர் அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.
இவ் கலந்துரையாடல்கள் பின்னர் கருத்து தெரிவித்த கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு. சுகுணன் இந்த விடயம் தொடர்பில் மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் வைத்தியரை தாக்கியவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களின் நன்மைகருதி பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த வைத்தியசாலை திறக்கப்படும் என தெரிவித்து இருந்தார்.
இதன் அடிப்படையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்கள் இன்றைய தினம் (21) சனிக்கிழமை அண்ணளவாக பி.ப 2.30 மணியளவில் பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி குழு மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்குமான சந்திப்பு இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் பனங்காடு பிரதேச வைத்தியசாலை திங்கட்கிழமை மீள திறக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பில் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் உறுப்பினர் இயன் மருத்துவர்
K.ஹரன்ராஜ் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் வைத்தியர் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிப்பது மட்டும் அல்லது மன வேதனையும் அடைந்து இருந்தோம் அதேசமயம் குறித்த ஒருநபர் செய்த கண்டிக்கதக்க செயலுக்காக அப்பாவி ஏழைமக்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதிக்கப்படுவதை ஏற்கமுடியாது.
வைத்தியசாலையை மீளத்திறந்து ஏழைமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி நோயுடன் மீண்டும் வீடுகளுக்குச் திரும்பிச்செல்லும் நிலையை இல்லாமல் செய்வதற்கு நாங்கள் தொடர்சியாக இரவுபகல் பாராது பல செயற்பாடுகளை மேற்கொண்டு இருந்தோம்.
அப்பாவி பொதுமக்கள் சிரமப்படக்கூடாது அதற்காக எங்கள் பதவிகளை துறக்கவும் நாங்கள் தயார்.
மேலும் வைத்தியசாலை திங்கட்கிழமை மீள திறக்கப்பட இருப்பதற்கு பக்கபலமாக இருந்தவர்கள் அனைவருக்கும் குறிப்பாக பா.உ சிவ.சந்திரகாந்தன் (பிள்ளையான்), திருமதி மங்களேஷ்வரி சங்கர் , பா.உ உதவராசா கலையரசன் மற்றும் மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், முன்னாள் அமைச்சர் நஸிர் அவர்களின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி நயிம் அவர்கள், முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான், செய்தி ஊடகங்கள் என ஆகியவர்கள் பல உதவிகளை வழங்கி இருந்தார்கள் அவர்களுக்கு வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் உறுப்பினர் இயன் மருத்துவர் K.ஹரன்ராஜ் அவர்கள் தெரிவித்து இருந்தார்.