7ஆவது ரி-20 உலகக்கிண்ண தொடர் குறித்த விஷேட பார்வை!

கிரிக்கெட் போட்டிகளில் இரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் ரி-20 கிரிக்கெட்டின் திருவிழா என வர்ணிக்கப்படும் ரி-20 உலகக்கிண்ண தொடரை கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்த ரி-20 உலகக்கிண்ண தொடரின் 7ஆவது அத்தியாயம் அடுத்த ஆண்டு அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ளமை யாவரும் அறிந்ததே!
இத்தொடருக்கான தயார்படுத்தல்கள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இத்தொடருக்கான இறுதி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
ரி-20 உலகக் கிண்ண தொடரில் 16 அணிகள் பங்கேற்கின்றன. ரி-20 தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் உள்ள அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுவிட்டன.
இதற்கிடையில், இத்தொடருக்கான தகுதிச்சுற்றில் விளையாடி ஆறு அணிகள் ரி-20 உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.
இதன்படி, இத்தொடரில் விளையாடும் இறுதி 16 அணிகளின் பட்டியல் இறுதி வடிவம் பெற்றுள்ளது. இதில் அண்மையில் நடைபெற்று முடிந்த ரி-20 உலகக்கிண்ண தொடருக்கான தகுதிச்சுற்றில் விளையாடி தகுதி பெற்ற ஆறு அணிகளின் விபரம்:
2014ஆம், 2016ஆம் உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெற்ற நெதர்லாந்து அணி மூன்றாவது முறையாக ரி-20 உலகக்கிண்ண தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.
மேலும், நமிபியா அணி முதல்முறையாக ரி-20 உலகக்கிண்ண தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. நமிபியா அணி, இதற்கு முன்னதாக 2003ஆம் ஆண்டு 50 ஓவர்கள் கொண்ட உலகக்கிண்ண தொடருக்கு தகுதி பெற்றிருந்து.
ஸ்கொட்லாந்து அணி, நான்காவது முறையாக ரி-20 உலகக்கிண்ண தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.
மேலும், ஓமன் அணி, பப்புவா நியூ கினி அணி மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளும் ரி-20 உலகக்கிண்ண தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, அவுஸ்ரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகள், பப்புவா நியூ கினி, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய 16 அணிகள் தற்போது இடம்பிடித்துள்ளன.
ரி-20 உலகக்கிண்ண தொடருக்கு முன்னர் நடைபெறும் தகுதி சுற்றில், இந்த ஆறு அணிகளும் உலக்கிண்ண தொடருக்கு நேரடி தகுதி பெறாத ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணியுடனும், பி பிரிவில் இடம்பெற்றுள்ள பங்களாதேஷ் அணியுடனும் மோதும்.
பின்னர் இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள், உலகக்கிண்ண தொடருக்கு நேரடி தகுதி பெற்ற எட்டு அணிகளுடன் இணைந்து விளையாடும்.
இதன் பின்னர், ஏ பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளும், பி பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளும், உலகக்கிண்ண தொடருக்கு நேரடி தகுதி பெற்ற எட்டு அணிகளுடன் இணைந்து விளையாடும்.
இதன்படி ‘ஏ’ பிரிவில் இலங்கை, பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, ஓமன் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் பங்களாதேஷ், நெதர்லாந்து, நமிபியா, ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.
ஒக்டோபர் 18ஆம் திகதி நடக்கும் ஆரம்ப போட்டியில், இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சுப்பர்-12 சுற்றுக்கு முன்னேறும்.
சுப்பர்-12 சுற்றிலும் தற்போது உலகக்கிண்ண தொடருக்கு நேரடி தகுதி பெற்ற எட்டு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒரு பிரிவில் பாகிஸ்தான், அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து, நடப்பு சம்பியன் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இரு லீக் சுற்று அணிகள், மற்றொரு பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் இரு லீக் சுற்று அணிகள் அங்கம் வகிக்கின்றன.
இந்திய அணி தனது ஆரம்ப போட்டியில் தென்னாபிரிக்காவை ஒக்டோபர் 24ஆம் திகதி பெர்த்தில் நடைபெறவுள்ளது. அதே நாளில் சிட்னியில் நடக்கும் மற்றொரு போட்டியில், தொடரை நடத்தும் அவுஸ்ரேலியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
சுப்பர்-12 சுற்றில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தேர்வாகும். இறுதிப்போட்டி 2020ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் திகதி மெல்பேர்னில் நடைபெறவுள்ளது.
அடுத்த வருடம் அவுஸ்ரேலியாவில் ஒக்டோபர் 18ஆம் திகதி முதல் நவம்பர் 15ஆம் திகதி வரை ரி-20 உலகக்கிண்ண தொடர் நடைபெறவுள்ளது.
மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், ஒட்டுமொத்தமாக 45 போட்;டிகள் நடைபெறவுள்ளன. ஏழு மைதானங்களில் இத்தொடரின் போட்டிகள் நடைபெறுகின்றன.
இத்தொடரில் ஆண்கள் கிரிக்கெட்டில் சம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும்.
இதேவேளை பெண்கள் கிரிக்கெட்டில் சம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு, 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும்.
ஆனால், அவுஸ்ரேலியா மகளிர் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றினால், அந்த தொகையை 600000 அமெரிக்க டொலர்களாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை நடைபெற்று முடிந்துள்ள ரி-20 உலகக்கிண்ண தொடரில், மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு முறையும், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் சம்பியன் பட்டம் வென்றுள்ளன.