இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிவிப்பு!

திரையரங்குகளின் மின்சார நிலுவை பட்டியலை செலுத்துவதற்கு நிவாரண காலம் வழங்குவதற்கு ஒப்புதல் கிடைத்திருப்பதாக இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (31) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் தொடக்கம் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தினால், நிதி பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் திரையரங்குகளின் மின் நிலுவை பட்டியலை செலுத்துவதற்கு ஒரு வருட நிவாரண காலத்தை வழங்குவதற்கு மின் சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் ஒப்புதல் கிடைத்திருப்பதாக இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பிரதமரும், புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய இது தொடர்பில் தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவர் காலநிதி ஜயந்த தர்மதாசக்கும் மின் சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிற்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது இந்த நிவாரணத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக, 2020 மார்ச் மாதம் தொடக்கம் நவம்பர் மாதம் வரையில் செலுத்தப்படவேண்டிய மின்சார நிலுவைப் பட்டியல் தொகையை செலுத்தாத திரையரங்குகளின் மின்சார நிலுவை பட்டியல் கட்டணத்தை 12 மாதங்களில் (12 மாத தவணைகளில்) செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
இதேபோன்று, இந்த காலப்பகுதிக்குள் மின்சார நிலுவைப் பட்டியல் கட்டணத்தின் அடிப்படையில் மின்சாரத்தை துண்டிக்காதிருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கான ஆலோசனை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார தனியார் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
கொவிட் – 19 தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட சூழ்நிலையின் அடிப்படையில் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களைப் போன்று நவீன டிஜிட்டல் திரைப்பட ஒளியுருப்படிவுக்கருவி உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகள் நீண்ட காலமாக செயலற்றிருந்ததினால் ஏற்படும் இயக்கக்குறை நிலைமை தொடர்பில் திரைப்படங்களை காட்சிப்படுத்துவோரின் Film Exhibitors Associations சங்கத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட போது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்து நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள 194 திரையங்களுக்கு மாத்திரம் மின்சார நிலுவை பட்டியல் கட்டணத்தை செலுத்துவதற்கு நிவாரணம் கிடைக்கின்றது.
கொவிட் – 19 காரணமாக மூடப்பட்டுள்ள திரையரங்குகளை 2021 ஜனவரி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.