கொரோனா தொற்று சந்தேகத்துடன் பதுங்கியிருந்த 49 பேர் சிக்கினர் – பொலிஸார் அதிரடி

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் 49 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் இவர்கள் சிக்கினர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
49 பேரும் கடந்த மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வந்த நிலையில் மறைந்திருந்தனர் என்று பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன வழங்கிய உத்தரவுக்கமைய இந்த நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இந்த 49 பேரின் பெயர்ப் பட்டியலில் அதிகளவானோர் மாத்தளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பிரதேசத்தில் இருந்து 10 பேர் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறையில் 4 பேரும், நுகேகொடயில் 4 பேரும், பதுளையில் 5 பேரும், சிலாபத்தில் 5 பேரும், களுத்துறையில் 3 பேரும், களனியில் 2 பேரும், குருணாகலில் 2 பேரும், அனுராதபுரத்தில் ஒருவரும். மாத்தறையில் இருவரும், குளியாப்பிட்டியில் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நபர்களில் 15 பேர் கட்டார் நாட்டிலும், மேலும் 15 பேர் இந்தோனிஷியாவிலும், 4 பேர் ஜோர்தான் நாட்டிலும், 8 பேர் சோமாலியா நாட்டிலும், 4 பேர் இந்தியாவில் இருந்தும் நாடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவர்களில் அம்பாறை மாவட்டம் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஒருவரும், களுத்துறை மாவட்டம் – பேருவளை பிரதேசத்தில் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.