இலங்கை

நூறு வருடங்களுக்கு மேல் பழமையான திருக்கோயில் ஆதார வைத்தியசாலையில் வைத்திய உபகரணங்கள் இருந்தும் அவற்றை பாவிக்க உரிய கட்டிட வசதிகள் பெற்றுத் தருவதில் பாரபட்சம்: எம்.பி குற்றச்சாட்டு.

-லோ.கஜரூபன்-

நூறு வருடங்களுக்கு மேல் பழமையான அம்பாறை திருக்கோயில் ஆதார வைத்தியசாலையில் வைத்திய உபகரணங்கள் இருந்தும் அவற்றை பாவிக்க உரிய கட்டிட வசதிகள் பெற்றுத் தருவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று கவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பி. பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறை நிரப்பு பிரேரனையில் 05 பில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்கின்ற நடவடிக்கை சம்மந்தமாக தீர்மானம் எடுப்பதற்கான அமர்வு நேற்று (17) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் மேலும் உரையாற்றும்போது,

திருக்கோயில் ஆதார வைத்தியசாலை, கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு ஆதார வைத்தியசாலையாகும்.

இந்த வைத்தியசாலைக்கு இருக்க வேண்டிய ஆளணி என்பது இல்லாமல் இருக்கின்றது. அது மட்டுமல்ல, கிட்டத்தட்ட 26 வைத்தியர்களை கொண்டிருக்க வேண்டிய வைத்தியசாலையில் தற்போது எட்டு (08)வைத்தியர்கள்தான் இருக்கின்றார்கள்.

ஐந்துக்கும் மேற்பட்ட வைத்திய நிபுணர்களைக் கொண்டிருக்க வேண்டிய வைத்தியசாலைக்கு ஒரு வைத்திய நிபுணர் கூட இல்லாத நிலை காணப்படுகின்றது. அங்கே கோடிக்கணக்கு பெறுமதியான சத்திர சிகிச்சை கூடத்துக்குரிய வைத்திய உபகரணங்கள் இருக்கின்றன. ஆனால் அங்கு கட்டிடங்கள் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
கோடிக்கணக்கான வைத்திய உபகரணங்கள் வைத்தியசாலையிலே முடக்கப்பட்ட நிலையில் இருக்கின்றது.

இங்கு இருக்கின்ற சுகாதார அமைச்சர் இவ் வைத்தியசாலையின் நிலைமையை நீங்கள் நேரடியாகச் சென்று கட்டாயமாக பார்க்க வேண்டும். உங்களுடைய அதிகாரிகளை அந்த இடத்திற்கு நீங்கள் அனுப்பி இதற்கு தீர்வு தர வேண்டும்.

அது மட்டுமல்ல, அந்த வைத்தியசாலையிலே இருக்க வேண்டிய பொது வைத்திய நிபுணர், சேர்ஜன் என, கென்சல்டன்மார்கள் அங்கு இருக்க வேண்டும். ஆனால் ஒருவர் கூட அங்கு இல்லை.

கிட்டத்தட்ட 57 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை இங்கு காணப்படுகின்றது. கூடுதலான உயிரிழப்பு இப்பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கின்றது.

இது ஒரு கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது. அங்கு சத்திர சிகிச்சை கூடம், பிசியோதெரபி பிரிவு, இரத்த வங்கி பிரிவு, டயலசிஸ் பிரிவு போன்றவற்றை செயற்படுத்தக்கூடிய உபகரணங்கள் இருக்கின்றது.

ஆனால் அங்கு கட்டிடங்கள் இல்லை. கட்டிடங்கள் அமைப்பதற்கு பெரிய தொகை இங்கு தேவைப்படுவதில்லை. உண்மையாக ஒரு 05 மில்லியனுக்குள் கூட அந்த கட்டிடங்களை கட்டி முடிக்க முடியும்.

ஆனால் வளங்களை வழங்குகின்ற விடயத்தில் பாரபட்சம் பார்க்கப்படுகின்ற நிலை இங்கு காணப்படுகின்றது.

ஆகவே, சுகாதார அமைச்சர் அவர்களே! நீங்கள் தயவு செய்து இந்த நிலைமைகளை கருத்தில் கொண்டு, அந்த இடத்துக்கு நீங்கள் விஜயம் செய்ய வேண்டும்.

ஏனென்றால் எங்களது ஜனாதிபதி அவர்கள் இது விடயமாக இரண்டு கிழமைக்கு முதல் கலந்துரையாடிய போது, நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி தந்திருக்கின்றார். உங்களோடு கதைத்து நீங்கள் அதை பார்வையிடுவதாகவும் அவர் எங்களுக்கு உறுதி மொழி தந்திருக்கின்றார்.

எனவே, நீங்கள் இது விடயத்தில் கூடிய கவனம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திலே கிட்டத்தட்ட 25 வருட காலமாக அபிவிருத்தி குழு, டி சி சி சேர்மன் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் இன்று இந்த ஆட்சி வந்த பின்பு, அந்த அபிவிருத்தி குழு தலைவர் நியமிக்கப்படவில்லை. அம்பாறை மாவட்டத்திலே 20 பிரதேச செயலகங்கள் இருக்கின்றன. அதிலே கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் ஒன்றாக இருக்கின்றது.

ஆனால் இற்றைவரையிலே அங்கு அபிவிருத்தி குழு நியமிக்கப்பட்டு இருந்தது. அதற்கான தலைவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் இன்று அது மாயமாக மறைந்ததாக பார்க்கப்படுகிறது.அந்த மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவே நான் பார்க்கின்றேன்.

மேலும், இந்த குறை நிரப்பு பிரேரனையில் 05 பில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்கின்ற நடவடிக்கை சம்மந்தமாக தீர்மானம் எடுப்பதற்கான ஒரு கலந்துரையாடலிலே, விசேடமாக கல்வி ரீதியான விடயங்களிலே முன்னெடுப்பை மேற்கொள்கின்ற பொழுது,

கூடுதலாக கஷ்ட, அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளுக்கான நிதி ஒதுக்கீடு கட்டாயமாக செய்யப்பட வேண்டும். பாடசாலைகளுக்கான நிதி ஒதுக்கீடு பாரபட்சம் இன்றி ஒதுக்கப்பட வேண்டும்.

கடந்த காலங்களிலே அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியானது மிகக் குறைவாக இருந்தது.

தற்பொழுதும் அம்பாறை மாவட்டத்தில் அனர்த்தத்தினாலே பல பாடசாலைகள் மிகவும் பாதிப்புக்குள்ளான நிலை காணப்படுகின்றது. இந்த பாடசாலைகளுக்கு செல்கின்ற வீதிகள் கூட உடைந்த நிலையிலே காணப்படுகின்றது.

இதனால் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதிலே பல்வேறு சிரமங்களை எதை நோக்கி வருகின்றார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த பாடசாலைகளுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் கூட இல்லாத நிலை காணப்படுகின்றது.

மாணவர்கள் தங்களது கல்வியை கற்றுக் கொள்வதற்காக போக்குவரத்து பஸ்கள் மூலமாகவே அங்கு செல்ல வேண்டி இருக்கின்றது. ஆனால் போக்குவரத்து சபை உரிய நேரத்திலே உரிய இடத்திலே அந்த பஸ்களை அனுப்பாமல் விட்டிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தில் உள்ள அழிக்கம்பை பிரதேசத்தில் உள்ள பாடசாலை மிகவும் கஷ்டமான நிலையிலேயே இருக்கின்ற பாடசாலையாகும். அந்த பாடசாலைக்கு செல்கின்ற வீதிகள் உடைந்த நிலையில் இருக்கின்றது. அதேபோல் மணற் சேனையில் இருக்கின்ற அதி கஷ்டப் பிரதேச பாடசாலை.

அதேபோல் தங்கவேலாயுதபுரத்தில் உள்ள பாடசாலை இந்த பாடசாலைகளுக்கு செல்கின்ற வீதியானது மிகவும் உடைந்த நிலையிலே இருக்கின்றது. இவ்வீதியால் யாரும் பயணிக்க முடியாத ஒரு நிலை இருக்கின்றது.

இந்த பாதைகளை சீர் செய்து அதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி குறித்த பாடசாலைகளின் புனரமைப்பு வேலைகளை செய்து அந்த மாணவர்களுடைய கல்வி முன்னேற்றத்திலே நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று இந்த இடத்திலேயே கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அதுமட்டுமல்லாமல், பாடசாலைகளுக்கான உபகரணங்கள், சீருடைகள் வழங்கப்படுகின்றபோது பாரபட்சம் காட்டப்படாமல் வேண்டுகோள் விடுக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் சீருடை, பாடசாலை உபகரணங்களை வழங்க வேண்டும் என்று நான் இந்த இடத்திலே ஞாபகம் மூட்ட விரும்புகின்றேன்.

ஏனெனில், நீங்கள் தனிப்பட்ட ஒருவருக்கு இதனை வழங்குகின்ற போது, இரண்டு பிரிவினர்களுக்கிடையே பாரபட்சம் காட்டப்படுகின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.

ஆகவே, வேண்டுகோள் விடுக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை சீருடை வழங்கும்படி இந்த இடத்திலே தயவாய் கேட்டுக் கொள்கின்றேன் என்றும் தனதுரையில் குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker