பொதுத்தேர்தலுக்கான அம்பாறை வேட்பாளரை அறிவித்தது ரெலோ

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அம்பாறை மாவட்டத்துக்கான வேட்பாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனும் பட்டிருப்பு கல்முனையைச் சேர்ந்த தாமோதரம் பிரதீவன் என்பவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
பாண்டிருப்பைச் சேர்ந்த தாமோதரம் பிரதீவன் ஒரு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் சமூக சேவையாளருமாவார். கல்முனை தமிழ் இளைஞர் சேவை அமைப்பின் ஆரம்பகால தலைவராகவும் கிழக்கு மாகாண தமிழ் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அமைப்பின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளராகவும் செயற்பட்டக்கொண்டிருப்பவர் என குறிப்பிட்டார்.
அத்துடன் கல்முனை மற்றும் அண்டிய பிரதேசங்களில் மனித உரிமை மீறல்கள் செயற்பாடுகளுக்கு எதிராக துணிவுடன் குரல் கொடுத்துவரும் தாமோதரம் பிரதீவன், கல்முனை முதல் பொத்துவில் வரையான தமிழ் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், திருப்திகரமான மக்கள் சேவையின் அடிப்படையிலும் அத்துடன் தமிழ் தேசியத்தின்பால் பற்றுறுதியுடன் மாவட்டத்தில் முழு வீச்சுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் கோரிக்கைக்கும் இணங்க மீண்டும் எமது வேட்பாளராக நியமிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.