நீதிபதி இளஞ்செழியனால் முஸ்லீம் பெண்ணிற்கு வழங்கப்பட்ட மரணதண்டனை உறுதிப்படுத்தப்பட்டது

கல்முனையில் இடம்பெற்ற கணவன் கொலை வழக்கில் அவரின் மனைவியான கலந்தூர் ரூபியா என்ற முஸ்லீம் பெண்மணிக்கு எதிராக 2012 ஆம் ஆண்டு சட்டமா அதிபரினால் கல்முனை மேல் நீதிமன்றத்தில் கொலை வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு அன்றைய மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. நீதிபதி இளஞ்செழியன் யாழ். மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்படத்தை அடுத்து தொடர்ந்து கல்முனையில் குறித்த வழக்கின் விசாரணை செய்யும் விசேட நீதிபதியாக கல்முனைக்கு நியமிக்கப்பட்டார்.
கணவனை கத்தியால் குத்தி கொலை செய்தமை மற்றும் கயிற்றினால் கழுத்தில் இட்டு தூக்கிட்டு கொலை செய்தமை போன்ற குற்றசாட்டுகள் நிரூபிக்கப்பட்டு 2016ஆம் ஆண்டு நீதிபதி இளஞ்செழியன் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பிற்கு எதிராக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் குற்றவாளி மேன்முறையீடு செய்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்றும் நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய மரணதண்டனை தீர்ப்பு சரியானது என உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
குறித்த வழக்கின் தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்ற இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.