மஹிந்தவே பிரதமராகும் வாய்ப்பு: 13 ஆவது திருத்தத்தை நீக்க இந்தியா அனுமதிக்காது- சித்தார்த்தன்

மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் பிரதமராக வர அதிகம் வாய்ப்புள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நடைபெறுவதுடன் கோட்டபாய ராஜபக்ஷவே ஜனாதிபதியாக உள்ளார் என்பதால் அவருடைய சகோதரர் மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் பிரதமராக வருவதற்கு வாய்ப்பு அதிமாகவுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 13ஆம் திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்யும் நோக்கத்துக்கு இந்தியா அனுமதிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் கட்சி சார்பாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் மன்னார் மாவட்ட அலுவலகம் இன்று (வியாழக்கிழமை) பனங்கட்டுகொட்டு பகுதியில் திறக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “இம்முறை தேர்தலில் மிக பெரும்பான்மையில் மஹிந்த தரப்பினர் வருவார்கள். மூன்றில் இரண்டு பெறும்பான்மையைப் பற்றிக் கதைத்தாலும் அவர்களுக்கு 120-130 வரையான ஆசனங்கள் கிடைக்கும் என நம்புகின்றார்கள்.
இருந்தாலும் அவர்கள் அரசியல் அமைப்பின் 19ஆவது திருத்ததை இல்லாமல் செய்வதுடன், அவர்களின் கட்சியில் உள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் 13 ஆம் திருத்தச் சட்டத்தையும் இல்லாமல் ஆக்கும் நோக்கத்துடன் இருப்பவர்கள்.
ஆனாலும், இந்தியா ஒரு போதும் இதற்கு அனுமதிக்காது. இப்படியான சூழலில் தமிழ் பிரதிநிதித்துவத்தை குறைத்துவிட வேண்டும் என்ற நோக்கில் பல கட்சிகள் வடக்கு கிழக்கில் இறக்கிவிடப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்தைச் சேர்ந்த கட்சிகளே பல கட்சிகளாக தேர்தலில் வாக்குக் கேட்கின்றார்கள்.
இப்படியிருக்கும் போது அவர்களின் உறவுகள் மூலமே வாக்குகளைப் பிரித்துவிடலாம் என்று ஏனையவர்கள் நினைக்கின்றார்கள். எனவே மக்கள் இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டும் கடந்த காலத்தை எண்ணியும் வாக்களிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.