ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் எமது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம்……

வி.சுகிர்தகுமார்
நாட்டில் ஊரடங்கு சட்டம் இன்று காலை முதல் தளர்த்தப்பட்ட நிலையில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவதை காணமுடிகின்றது.
இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு சந்தை பிரதேசங்களில் மக்கள் வெள்ளம் இன்று அலை மோதியதை அவதானிக்க முடிந்தது.
சத்தோச மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நீண்ட வரிசையில் தேவையானவற்றை பெற்றுக்கொள்ள மக்கள் வெள்ளம் காத்திருந்ததையும் அங்கு பாதுகாப்பு படையினர் அர்ப்பணிப்போடு கடமையில் ஈடு படுத்தப்பட்டிருந்தமையையும் காண முடிந்ததுடன் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி களத்தில் நின்று மக்களுக்கு ஆலோசனை வழங்கி வருவதையும் பொலிசார் ஒலிபெருக்கி மூலம் மக்களை அறிவுறுத்தல் வழங்குவதையும் கண்டுகொள்ள முடிந்தது.
இதேநேரம் அம்பாரை மாவட்ட இந்து இளைஞர் மன்றம் மற்றும் பொதுமகன் ஒருவரின் உதவியுடன் முகக்கவசங்கள் பெற்றுக்கொடுக்கும் பணிகள் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைவாக இந்து இளைஞர் மன்றம் 800 முகக்கவசங்களையும் உதவிக்கல்விப்பணிப்பாளர் சு.சிறிதரனின் ஒத்துழைப்புடன் மு.சுரேஸ் எனும் டெயிலர் மூலம் தயாரிக்கப்பட்ட 300 இற்கும் மேற்பட்ட முகக்கவசங்களையும் தயாரித்து ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.அகிலன் மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நிருவாகத்திடமும் கையளித்ததுடன் வீதிகளில் முகக்கவசம் இல்லாது சென்ற மக்களுக்கும் வழங்கினர்.
இதேநேரம் ஆலையடிவேம்பில் அன்புக்கரங்கள் எனும் மக்கள் நலன் அமைப்பினர் மிகவும் வருமானம் குறைந்த மக்களின் உணவுத்தேவையினை பூர்த்தி செய்வதற்காக இன்று காலை முதல் கொழும்பில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவார் மற்றும் சில நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட உலர் உணவு பொதிகளை மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையினையும் முன்னெடுத்துள்ளமை சிறப்பானதாகும்.