தோணிக்கல் பாலத்தின் கீழாக சட்டவிரோத ஆற்றுமண் அகழ்வில் ஈடுபட்ட 9 உழவு இயந்திரங்கள் கைப்பற்றல் -சாரதிகளும் கைது -திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் அதிரடி நடவடிக்கை

வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோணிக்கல் பிரதேசத்தை சுற்றிவளைத்த திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் தோணிக்கல் பாலத்தின் கீழாக சட்டவிரோதமான முறையில் ஆற்றுமண் அகழ்வில் ஈடுபட்ட 9 உழவு இயந்திரங்களை கைப்பற்றியதுடன் உழவு இயந்திரங்களின் சாரதியினையும்; இன்று(25) அதிகாலை கைது செய்தனர்.
திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.டபிள்யு.வி.எஸ்.ராஜபக்ஷ தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின்போதே குறித்த உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டதுடன் சாரதிகளும் கைது செய்யப்பட்டனர்.
குறித்த பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு நடைபெறுவதாகவும் இதனால் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பாலத்திற்கு சேதம் ஏற்படுவதாகவும் தமக்கு பொதுமக்களால் தகவல் வழங்கப்பட்டு வந்த நிலையிலேயே இன்று அதிகாலை சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
மேலும் மண் அகழ்வு நடவடிக்கையினால் விவசாயிகள் பெரிதும் பயன்படுத்தும் பாலத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வீதிகளும் முற்றாக அழிவடைந்து வருவதை இங்கு அவதானிக்க முடிந்ததாகவும் அவர்கள் கூறினர்.
அத்தோடு புதிதாக அமைக்கப்பட்ட கீத்துபத்து பாலத்தின் அருகே வீதிக்கு பாதுகாப்பாக அமைக்கப்பட்ட பாரிய கொங்றீட் அணையும் வீழ்ந்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டனர்.
இதன் காரணமாகவே குறித்த உழவு இயந்திரங்களை கைப்பற்றியதுடன் மண் அகழவில் ஈடுபட்டவர்களிடம் மண் அகழ்விற்கான எந்தவித சட்டரீதியான ஆவணங்களும் இருக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் கைப்பற்ற உழவு இயந்திரங்களையும் அதன் சாரதிகளையும் அக்கரைப்பற்று பொலிசாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்தாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.