நாடளாவிய ரீதியில் கடும் மழை: 5 பேர் பலி; 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் கடந்த ஒரு வாரமாக நிலவும் சீரற்ற காலநிலையால் ஐவர் உயிரிழந்துள்ளதோடு 573 குடும்பங்களைச் சேர்ந்த 2272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சீரற்ற காலநிலை எதிர் வரும் சில தினங்களு க்கு தொடரும் என்றும் சில பிரதேசங்களில் 150 மில்லி மீற்றரை விட அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் எனத் தெரிவித்து 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலநிலை
மழையுடனான காலநிலை எதிர்வரும் ஓரிரு தினங்களுக்கு நீடிக்கும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியிருக்கிறது. அத்தோடு 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஏனைய சில பிரதேசங்களிலும் அதிக மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்று;ம கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் 150 மில்லி மீற்றரை அண்மித்த மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும். ஊவா, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் , அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும்.
அத்தோடு மத்திய, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் , திருகோணமலை மாவட்டத்திலும் மழையுடனான காலநிலை நிலவும் போது காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்க கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியிருக்கிறது.
எனவே அடை மழை மற்றும் காற்றினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சிவப்பு எச்சரிக்கை
150 மில்லி மீற்றரை விட அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் எனத் தெரிவித்து 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதி கூடிய மழைவீழ்ச்சி
கடந்த 24 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் 158.2 மில்லி மீற்றர் அதி கூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
பாதிப்பு
கடந்த 18 ஆம் திகதி முதல் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 7 மாவட்டங்களில் 573 குடும்பங்களைச் சேர்ந்த 2272 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஐவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு கடும் காற்று மற்றும் வெள்ளம் என்பவற்றினால் ஒரு குடியிருப்பு முழுமையாகவும், 38 வீடுகள் பகுதியளவிலும், ஏனைய கட்டங்கள் மூன்று பகுதியளவிலும்சேதமடைந்துள்ளன. அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட 61 குடும்பங்களைச் சேர்ந்த 203 பேர் தற்காலிக முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம்
புத்தளம் மாவட்டத்தில் சிலாபம், மஹாவெவ, பள்ளம, முந்தளம், மற்றும் ஆணமடு ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் 549 குடும்பங்களைச் சேர்ந்த 2214 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 11 குடியிருப்புக்கள் பகுதிளவில் சேதமடைந்துள்ளன.
மொனராகலை
மொனராகலை மாவட்டத்தில் பிபில பிரதேசத்தில் மண்சரிவினால் 61 குடும்பங்களைச் சேர்ந்த 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவரும் தற்காலிக முகாம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு நால்வர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவரில் ஒருவர் கோரளை ப்பற்று பிரதேசத்தில் பலத்த காற்றினாலும், ஏனைய மூவரும் மன்முனைப்பற்று பிரதேசத்தில் நீரில் மூழ்கியும் உயிரிழந்துள்ளனர்.
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரத்தில் பலத்த மழையால் நீர் மட்டம் அதிகரித்தமையால் ஆறொன்றில் பயணித்துக் கொண்டிருந்த படகு விபத்துக்குள்ளாகி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
களுத்துறை
களுத்துறை மாவட்டத்தில் மதுரவெல மற்றும் இங்கிரிய பிரதேசங்களில் கடும் காற்று , மின்னல் தாக்கம் என்பவற்றினால் 19 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஒரு வீடு முழுமையாகவும், 18 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
அம்பாந்தோட்டை
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கடுவான பிரதேசத்தில் கடும் காற்றினால் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, குடியிருப்பொன்றும் சேதமடைந்துள்ளது.
கேகாலை
கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்ல மற்றும் ரம்புக்கன ஆகிய பிரதேசங்களில் 2 குடும்பங்களைச் சேர்ந்த எட்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு இரு குடியிருப்புக்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.