பேலியகொடை மீன் சந்தை மீண்டும் திறக்கப்படுகிறதா? – கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்

ஊழியர்களின் இறுதி பி.சி.ஆர். அறிக்கையின் அடிப்படையிலே பேலியகொடை மீன் சந்தையை மீண்டும் திறப்பதற்கான திகதி நிர்ணயிக்கப்படும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
பேலியகொட மீன்சந்தையில் பணிபுரியும் ஊழியர்களில் பலருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதையடுத்து, குறித்த மீன்சந்தையை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “பேலியகொடை மொத்த மீன் சந்தை தொகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மாதம் இறுதியில் மீன்சந்தையை தற்காலிகமாக மூடிவிட தீர்மானித்தோம்.
மக்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பாக கருத்திற்கொண்டு, அங்கு ஊழியர்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் இறுதி பி.சி.ஆர். அறிக்கையின் அடிப்படையிலே, மீன் சந்தையை மீண்டும் திறப்பதற்கான திகதி நிர்ணயிக்கப்படும்.
அத்துடன் மீன் சந்தை திறக்கப்படும்போது ஆரம்பமாக மொத்த வியாபாரிகளுக்கு மாத்திரம் திறக்கப்படும். பின்னர் சுகாதார வழிகாட்டல் மற்றும் சட்டத்தின் பிரகாரம் சில்லறை வியாபாரத்துக்கு முறையான வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்க திட்டமிட்டிருக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.