தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட கரையோர உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு

(பாறுக் ஷிஹான்)
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் மஞ்சுல ரட்நாயக்க ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில், இறக்காமம்,நிந்தவுர்,காரைதீவு,சம்மாந்துறை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களில் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் சகல உறுப்பினர்களும் கலந்து கொண்டு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினரும் கரையோரப் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான ஏ.ஆதம்பாவா இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
தமது பிரதேச மக்கள் இரவு பகல் பாராது உங்களது வீட்டைத்தட்டுவார்கள், தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வார்கள். அவர்களை வரவேற்று அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாறாக அதிகாரம் கிடைத்துவிட்டது என்பதற்காக அசட்டையாக இருந்துவிடக்கூடாது. இதனை தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் அங்கீகரிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் .
நாட்டையும்,தேசத்தையும்,மக்களையும், பிராந்தியத்தையும் அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. உங்களுக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பினை உங்களுக்கு வாக்களித்த, வாக்களிக்காத மக்களுக்கும் பணியாற்ற வேண்டும்.
சபையின் சட்டதிட்டங்களை நன்றாகப்படித்து அதற்கேற்றால்போல் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். ஊழல் மோசடியில்லாத மக்களுக்கான ஒரு ஆட்சியை தேசிய மக்கள் சக்தி நாட்டில் முன்னெடுத்து வருகின்றமை நீங்கள் எல்லோரும் அறிந்த விடயமாகும் என்றார்.
இங்கு பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல ரட்நாயக்க உட்பல பலரும் உரையாற்றினர். இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேசங்களின் அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.