திருக்கோவில் கல்வி வலய பிரதேச பாடசாலை மாணவர்களது சிகையலங்காரத்தில் சீரான ஒழுங்குமுறையை பேணுதல்: சிகை அலங்கார நிலைய உரிமையாளர் சங்கத்தினரால் உறுதி!

திருக்கோவில் கல்வி வலய பிரதேச பாடசாலை மாணவர்களது சிகையலங்காரத்தில் சீரான ஒழுங்குமுறையை பேணுதல் தொடர்பான விசேட கூட்டமொன்று திருக்கோவில் பிரதேசசெயலகத்தில் நேற்று (26) இடம்பெற்றது.
மாணவர்களின் சிகை அலங்காரம் தொடர்பாக பல்வேறு விமரிசனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் இக்காலகட்டத்தில் நடாத்தப்பட்ட இக்கூட்டத்தில், பாடசாலை மாணவர்களுக்கான சிகையலங்காரமானது பாடசாலை சட்டதிட்டங்களுக்கு அமைவானமுறையில் ஒழுக்கமானதாக சகல சிகை அலங்காரநிலையங்களிலும் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கை சிகை அலங்கார நிலைய உரிமையாளர் சங்கத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனை 25.07.2023 முதல் திருக்கோவில் கல்வி வலய பிரதேசத்தில் முழுமையாக அமுலாக்குவதென தீர்மானிக்கப்பட்டு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. இரா. உதயகுமார், திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.த. கஜேந்திரன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு. வி. பபாகரன் ஆகியோரது இணைதலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மதத்தலைவர்கள், திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி Dr. ப. மோகனகாந்தன், திருக்கோவில் பொது சுகாதார பரிசோதகர், பாடசாலை அதிபர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர், திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், சிகைஅலங்கார நிலைய உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.