திருக்கோவிலில் தனிமைப்படுத்தலுக்குட்பட்டு வந்த 105 பேர் விடுதலை


அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனா தொற்று இருக்கக்கூடுமென்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த 105 பேர் தொற்று உறுதி செய்யப்படாததால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தலுக்குட்பட்டுவந்த அனைவரும் நேற்றையதினம் தினம் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் எமது பிராந்திய செய்தியாளர் பிரதேச செயலாளரை தொடர்பு கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பிரதேச செயலாளர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நபருக்கு ஒருவாரத்திற்கு 1000 ரூபா பெறுமதியான உலருணவு வழங்கப்படவேண்டும். உதாரணமாக ஒரு குடும்பத்தில் 5 பேரிருந்தால் ஒரு வாரத்திற்கு 5000 ரூபா பெறுமதியான உலருணவு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு இருவாரங்களுக்கு 10ஆயிரம் ரூபா பெறுமதியான உலருணவு வழங்கப்பட வேண்டும்.
எமது பிரதேசத்தில் 105 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் சுமார் எட்டுப்பேர் அளவில் தனியாளாக இருந்தனர். ஏனையோர் அனைவரும் குடும்பத்தினர். ஆனால் கொரோனா அவசரதேவைக்கென்று எமக்குக் கிடைத்ததே 2 இலட்ச ரூபாய். அந்த நிதியில் முடிந்த உதவிகளைச் செய்தோம்.
வினாயகபுரப்பகுதியில் 14 பேர் தனிமைப்படுத்தலுக்குட்பட்டார்கள். அனைவரும் விடுதலையாகியுள்ளனர். நாமும் முடிந்தளவு தனவந்தர்கள் மற்றும் அமைப்புகளிடம் வேண்டுகோள்விடுத்து உலருணவு நிவாரணங்களை வழங்கிவந்தோம்.
காரைதீவு தவிசாளர் ஜெயசிறில் மற்றும் சமுகசெயற்பாட்டாளர்களான வினோஜ்குமார், சகாதேவராஜா போன்றோரின் உதவியால் மண்டானை, காயத்திரி கிராமம், தாண்டியடி உமிரி, திருப்பதி, சங்குமண்கிராமம், சங்குமண்கண்டி, தாமரைக்குளம், வினாயகபுரம் போன்ற கிராமங்களில் சுமார் 800 குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகளை வழங்கி வைத்திருக்கிறோம்.
இவர்களைப்போல் மேலும் பல்வேறு தனவந்தர்கள் பொது அமைப்புகள் உதவியிருக்கின்றன. புலம்பெயர் அமைப்புகள் தாமாக முன்வந்து உதவியிருக்கின்றன. மிகவும் பின்தங்கிய தங்கவேலாயுதபுரம், கஞ்சிக்குடிச்சாறு போன்ற கிராமங்களுக்கும் சென்று வழங்கியிருக்கிறோம்.
பலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் இவைகள் கிடைத்துள்ளன. சிலர் விடுபட்டிருக்கலாம்.
எது எப்படியிருப்பினும் கிராமசேவை உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான செயற்பாட்டினால் பெரும்பாலும் யாரும் விடுபடாதமாதிரி வழங்கியிருக்கிறோம். இன்னும் தேவைப்பாடுகள் உள்ளன. ஜீவனோபாயம் பற்றி இன்றைய சூழலில் அவர்களே கரிசனை காட்டவேண்டும். நாம் அடிப்படை உணவு உறையுள் தொடர்பாக சுகாதாரம் பற்றிச்சிந்திக்கலாம்.
பொதுவான வேலைப்பாட்டில் சிறுதவறுகள் வரலாம். அதற்கு நாம் விதிவிலக்கல்ல. எனினும் இக்கொரோன காலகட்டத்திலும் நாம் தினமும் இங்குவந்து மக்களுக்கான சேவையை முன்னெடுத்ததில் திருப்தி கிடைத்துள்ளது.
என்னுடன் உதவி பிரதேச செயலாளர் சதீஸ், உயரதிகாரிகள், அலுவலக உத்தியோகத்தர்கள், கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதாரஅபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என பலதரப்பட்டவர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கியதன் பலனாக திருக்கோவில் பிரதேசம் இன்று பிரச்சினையின்றி இருக்கின்றது என்று கூறியுள்ளார்.



