
ரஷ்யாவின் விளாடிமிர் புட்ன் மற்றும் வட கொரியாவின் கிம் ஜொங் உன் ஆகியோரின் பங்களிப்புடன் புதன்கிழமை (03) தனது நாட்டின் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் நடத்தினார்.
இதன்போது பேசிய சீன ஜனாதிபதி, உலகம் அமைதி அல்லது போருக்கு இடையேயான தேர்வை எதிர்கொள்கிறது என்று தியானன்மென் சதுக்கத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கூடியிருந்த கூட்டத்தில் வலியுறுத்தினார்.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பான் தோல்வியடைந்த 80 ஆண்டுகளைக் குறிக்கும் இந்த ஆடம்பர நிகழ்வை மேற்கத்திய தலைவர்கள் பெரும்பாலும் புறக்கணித்து வருகின்றனர்.
உக்ரேன் போர் மற்றும் கிம்மின் அணுசக்தி இலட்சியங்கள் காரணமாக மேற்கத்திய நாடுகளின் விரோதிகளாக பார்க்கப்படும் புட்டின் மற்றும் கிம் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாக இந் நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.
சீனாவின் இராணுவ வலிமை, இராஜதந்திர செல்வாக்கை வெளிப்படுத்த அரங்கேற்றப்பட்ட இந்த நிகழ்வு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக வரிகள் மற்றும் நிலையற்ற கொள்கை வகுத்தல் ஆகியவை பங்காளிகள் மற்றும் போட்டியாளர்களுடனான அதன் உறவுகளை சீர்குலைக்கும் நேரத்திலும் வந்துள்ளது.
இந்த அணி வகுதிப்பில் படைப் பலம், ஏவுகணைகள், டாங்கிகள் மற்றும் ட்ரோன்கள் போன்ற அதிநவீன இராணுவ உபகரணங்கள் என்பனவும் காட்சிப்படுத்தப்பட்டன.
நிகழ்வுக்கு முன்னதாக முன்னாள் தலைவர் மாவோ சேதுங் அணிந்திருந்த உடையை அணிந்திருந்த ஜின்பிங், 20க்கும் மேற்பட்ட தலைவர்களை சிவப்பு கம்பள வரவேற்புடன் வரவேற்றார்.