நோய்த்தாக்கம் ஏற்படும்போது விவசாயிகள் விவசாய போதானசிரியர்களை நாடாது விவசாய விற்பனையாளர்களையே நாடுகின்றனர்: அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விஸ்தரிப்பு அதிகாரிகள்

வி.சுகிர்தகுமார்
நோய்த்தாக்கம் ஏற்படும்போது விவசாயிகள் விவசாய போதானசிரியர்களை நாடாது விவசாய இரசாயன விற்பனையாளர்களையே நாடுகின்றனர். நோய் தாக்கம் உச்சக்கட்டத்தை அடைந்த பின்னரே எங்களை தேடி வருகின்றனர் என விவசாய திணைக்களத்தின் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
அம்பாரை மாவட்டத்தில் நெற் செய்கையினை பெரிதும் பாதித்துக்கொண்டிருக்கும் அறக்கொட்டி எனும் கபிலநிறத்தத்திகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாட்டை அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விஸ்தரிப்பு காரியாலய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக விவசாய இரசாயன விற்பனையாளர்களை தெளிவூட்டும் செயலமர்வுகளையும் நடாத்தி வருகின்றனர்.
இதற்கமைவாக நிலையத்தின் பொறுப்பதிகாரி விவசாயப்போதனாசிரியர் எம்.எஸ்.எம்.நிப்றாஸ் தலைமையில் அக்கரைப்பற்று விவசாய விஸ்தரிப்பு காரியாலயத்தில் இன்று (17) முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கையில் அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் மற்றும் தம்பிலுவில் வலய உதவி விவசாயப்பணிப்பாளர் எஸ்.தேவராணி, மாவட்ட விவசாய பயிற்சி நிலைய முகாமையாளர் எம்.வை.நியாஸ், பயிர்ப்பாதுகாப்பு பாடவிதான உத்தியோகத்தர் ஏ.செயினுலாப்தீன், கமநல நிலைய அதிகாரி யு.எல்.ஏ. ஹமீட், விவசாயப்போதானாசிரியர் எஸ்.நர்மதன் விவசாய தொழிநுட்ப உத்தியோகத்தர் ரி.ஏ.தக்ஷிலா பிரியதர்சினி உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
நோய் தாக்கத்தின் தீவிரத்தை பொறுத்தே பீடை நாசினிகள் விசிறப்பட வேண்டும். என்பதை விவசாய இரசாயன விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். மேலும் விவசாய திணக்களத்தால் சிபாரிசு செய்யப்பட்ட பீடை நாசினிகளை மாத்திரம் விற்பனை செய்ய வேண்டும். அதை விடுத்து தங்களிடம் உள்ள பீடை நாசினிகளை விற்பனையை கருத்தில் கொண்டு கொடுப்பதால் விவசாயிகளும் பயனற்று போவர். இதனால்; விவசாய இரசாயன விற்பனையாளர்களாகிய உங்கள் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கும் பாதகம் ஏற்படும்.
ஆகவே விவசாய இரசாயன விற்பனையாளர்கள் தேவை ஏற்படும்போது விவசாய போதானாசிரியர்களை சந்திக்குமாறு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அத்தோடு மிகவும் அவதானத்துடன் நம்பிக்கையுடையவர்களாக செயற்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.