ஆலையடிவேம்பு சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடப்பட்டது.

வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடுதல் தொடர்பாகவும் அதில் உள்ள சாதக பாதகங்களை அறியும் நோக்குடனும் நேற்று (17)இடம்பெற்ற அரச அதிகாரிகளின் உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னரே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்;திரன், ஆலையடிவேம்பு உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர், மற்றும் அக்கரைப்பற்று நீர்ப்பாசன பொறியியலாளர் ரி.விவேக்சந்திரன், உள்ளிட்ட உயர் அரச அதிகாரிகள் விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் மீனவர் சங்க உறுப்பினர்கள் களப்பு முகாமைத்துவ குழுவின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுதாகவும் ஆகவே சின்னமுகத்துவார ஆற்றுமுகப்பிரதேசத்தை அகழ்ந்து மேலதிக நீரை வெளியேற்றி வயல் நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
திருக்கோவில் பிரதேச செயலாளர் இங்கு கருத்து தெரிவிக்கையில் இரண்டு முகத்துவாரங்கள் உள்ள நிலையில் முதலில் சின்னமுகத்துவாரத்தை அகழ்ந்து விடலாம்; என கூறினார். இதேநேரம் இங்கு கருத்து வெளியிட்ட அக்கரைப்பற்று நீர்ப்பாசன பொறியியலாளர் ரி.விவேக்சந்திரன் மழை பெய்வதற்கான அதிக வாய்ப்பும் களப்பில் தேவைக்கதிகமான நீரும் உள்ளதால் முகத்துவாரத்தை அகழ்ந்து விடுவது பொருத்தமானது என கூறினார்.
சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடும் பணியில் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசிக் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் விவசாய பிரதிநிதிகள் என பலரும் சமூகமளித்திருந்தனர்.



