இலங்கை

மாணவர்கள் ஏமாற்றப்படுவதை தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

நாட்டில் தற்போதுள்ள அபாயகரமான சூழல் மிகவும் பாரதூரமானது, இது இக்கால சந்ததிக்கு மட்டுமன்றி எதிர்கால சந்ததிக்கும் பாரதூரமான விளைவை உண்டுபண்ணக்கூடியது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும்,

நாட்டில் தற்போதுள்ள அபாயகரமான சூழல் மிகவும் பாரதூரமானது. இது இக்கால சந்ததிக்கு மட்டுமன்றி எதிர்கால சந்ததிக்கும் பாரதூரமான விளைவை உண்டுபண்ணக்கூடியது.

இத்தகைய முடக்க மற்றும் தொற்று மற்றும் மரணச் சூழலில் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.

கல்வி அமைச்சும், கல்வித் திணைக்களங்களும், பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும் உலக வழிமுறைகளுக்கூடாக புதிய தொழினுட்பங்களைக் கையாண்டு கல்வியைப் புகட்ட எடுக்கும் முயற்சி பாராட்டப்பட வேண்டியது.

ஆனால் அந்த வழிமுறைகள் எமது நாட்டில் தோற்றுப்போகும் அபாய நிலை உருவாகியுள்ளது.

காரணம் நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களில் 43 வீதமான மாணவர்களின் பெற்றோர் மட்டுமே நிரந்தர வருமானத்தைப் பெறுபவர்கள். அவர்களின் பெற்றோருக்குக் கல்விக்கான பணச்செலவு ஓரளவு ஈடுசெய்யக்கூடியது.

ஆனால் 57வீதமான மாணவர்களின் பெற்றோர் நிரந்தர வருமானமற்றவர்கள். அவர்கள் தமது ஜீவனோபாயத்திற்கே வழியில்லாத சூழல் இப்போது உருவாகியுள்ளது.

இந்நிலையில் தமது பிள்ளைகளுக்கான கல்வியை மேம்படுத்த அல்லது கொண்டுசெல்ல மாற்று வழிதெரியாது திகைத்து நிற்கின்றனர்.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள இணையவழி கற்கைக்கு பெருமளவு பணம் தேவைப்படுகின்றது.

இணையவழியைப் பெற்றுக்கொள்ளப் பெறுமதியான தொலைபேசி அல்லது கணினி தேவைப்படுகின்றது. இதைவிட மிகப்பாரதூரமாக விடயம்!!

இணைய வழியை ஏற்படுத்த இணைப்புக்களுக்குச் செலவுசெய்யும் பணம் அதிகமாகக் காணப்படுகின்றது.

கற்றலுக்கான ஜூம் டாட்டா (ஜூம் data) என அறிமுகப்படுத்தி பெருந்தொகைப் பணம் பறிக்கப்படுகின்றது.

ஒருமாதத்திற்கு என வழங்கப்படும் டாட்டா (data) வெறும் இரண்டு மூன்று மணித்தியாலங்களில் தீர்ந்துபோகின்றது. இதனால் மாணவர்கள் மன உலைச்சலுக்கு உள்ளாவதும் பெற்றோர் அதற்கான வழிதெரியாமல் இருப்பதும் வேதனையான விடயம்.

இத்தகைய கல்வி அமைச்சின் ஜூம் (ZOOM) மூலமான அல்லது இணையவழி மூலமான கல்விச் செயற்பாடு 50வீதத்திற்கு மேற்பட்ட மாணவர்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லாமல் போகின்றது. இதனை தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இணையவழிச் செயற்பாடுகளுக்கூடாக அறியமுடிகின்றது.

இதனால் ஆசிரியர்களும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுப்பதோடு அவர்களும் பெருமளவு பணத்தைச் செலவுசெய்ய வேண்டியுள்ளது. ஆகையால் தயவு செய்து தற்போதுள்ள சூழ்நிலையில் பாடசாலைகள் இயங்கவில்லை.

மாணவர்களுக்காகச் செலவு செய்யப்படும் பணம் மீதப்படுத்தப்பட்டுள்ளதால் மாணவர்களின் கற்றலுக்கான இணையவழிக் கட்டணங்களை இலவசமாக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஜூம் (ZOOM) மூலமாக கற்றலை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு அதற்கான டாட்டா (data) களை இலவசமாக வழங்குங்கள்.

அத்தோடு அந்த மாணவர் கற்றலுக்கான ஜூம் (zoom) டாட்டா (data) வை மட்டும் இலவசமாக வழங்குவதோடு அவர்களுக்காக ஜூம் (ZOOM) வகுப்புகளை நடாத்துகின்ற ஆசிரியர்களுக்கும் டாட்டா (DATA) களை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

இதைவிட இன்று சகல தொலைக்காட்சி அலைவரிசைகளும் கட்டண அலைவரிசைகளாகவே உள்ளன. அவற்றுக்குக்கூடப் பணம் செலவழித்தே தொலைக்காட்சி ஊடாக கல்வியைத் தொடர முடிகின்றது.

அதற்கான மாற்றுத் திட்டத்தை உருவாக்கி எதிர்கால சந்ததியின் வாழ்வு வளமாகக் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker