இலங்கை
தனிச் சிங்கள ஜனாதிபதி போல் தனிச் சிங்கள அரசாங்கம் வேண்டும்! ஞானசார தேரர் கோரிக்கை

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
ஜனாதிபதித் தேர்தலில் பௌத்த சிங்கள மக்கள் தனிச் சிங்களத் தலைவரைத் தெரிவு செய்ததைப் போன்று எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலில் தனிச் சிங்கள அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள பொதுபலசேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்:-
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நேரத்திலிருந்து இன்று வரை தான் ஒரு சிங்கள பௌத்த தலைவன் என்பதைப் பல செயற்பாட்டின் ஊடாக நிரூபித்துள்ளார்.
எனவே, எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் தனிச் சிங்கள அரசாங்கம் உருவாக வேண்டும்.
நாட்டில் ஒரு சட்டமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். எமது நாட்டில் இனங்களுக்கிடையில் வெவ்வேறு சட்டங்கள் வேறுபடுத்தப்பட்டுள்ளன.
ஒரு நாட்டில் ஒரு சட்டத்தையே அனைத்து இன மக்களும் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதிக்கு முழு ஒத்துழைப்பையும் பெரும்பாலான மக்கள் வழங்க வேண்டும்.
பாரளுமன்றத்தின் பாரம்பரிய முறைமைகளே பல நெருக்கடிகளுக்கும், அரசாங்க நிர்வாகத்துக்கும் தடையாகவுள்ளன.
தனிச் சிங்கள அரசாங்கத்தில் அடிப்படைவாதக் கொள்கையற்ற தமிழ், முஸ்லிம் இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய அரசியல்வாதிகள் உள்வாங்கப்பட வேண்டும்.
அடிப்படைவாதத்துக்குத் துணைபோனார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் புறக்கணிக்கப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.