கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் தமிழர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் – கோடீஸ்வரன் எம்.பி

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில், கல்முனை வாழ் தமிழர்கள் அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
எனினும், இதன்போது விசேட தீர்மானங்கள் எதுவும் எட்டப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கருணாவும் இந்த பிரதேச செயலகம் தொடர்பான எந்த அடிப்படை அறிவும் அற்றவராகத்தான் இருக்கின்றார்.
மேலும் ஹரிஷ் இந்த பிரதேச செயலகம் நிலத்தொடர்பற்ற ஒரு பிரதேச செயலகம் என வெளியுலகத்திற்கு காட்டியிருந்தார். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்தான் நாடாளுமன்றத்தில் வரைபடத்தின் மூலம் இந்த பிரதேச செயலகம் நிலத்தொடர்புடைய ஒரு பிரதேச செயலகம் என சுட்டிக்காட்டியிருந்தோம்.
அதன் பின்னர் அனைத்து சிங்கள் அரசியல்வாதிகளும் அதனை ஏற்றுக்கொண்டனர். இவ்வாறு நிலத்தொடர்புடைய பிரதேச செயலகத்தை தரமுயர்த்திக் கொடுப்பது நியாயமானது” என மேலும் தெரிவித்தார்.