ஆலையடிவேம்பு MOH பிரிவில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு சினோபார்ம் தடுப்பூசிகள்: 30 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்….

-கிரிசாந் மகாதேவன்-
ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நாளை(24.07.2021) முதல் சினோபார்ம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ் அகிலன் தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு முதற்தடவையாக 2500 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இவற்றினை (24,25,26) ஆகிய மூன்று தினங்களில் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தடுப்பூசிகள் செலுத்துவதற்கு ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயம் மற்றும் அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலை ஆகிய மூன்று நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது எனவும்.
இதில் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் 3 மாதங்களை கடந்த கர்ப்பிணி தாய்மார்களுக்கு மாத்திரம் தடுப்பூசிகள் ஏற்றப்படும் எனவும் கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயம் மற்றும் அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலை ஆகிய நிலையங்களில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச 30 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறினார்.
மேலும் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு கொரோனா தொற்றாளர்கள் பதிவாகும் வீதம் குறைவடைவந்துள்ள நிலையில் தற்போது பச்சை வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்.
இவ் நிலைதொடர மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் சிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் நமது பிரதேசத்தை அபாய நிலைக்கு கொண்டு செல்லக்கூடும் எனவே அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.