ஆலையடிவேம்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனை….

வி.சுகிர்தகுமார்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டிய பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் நாட்டில் இன்று சர்வமத ஸ்தலங்களிலும் உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.
இந்த நிலையில் தாக்குதலில் இறந்தவர்களின் நினைவாக சகல மதஸ்தலங்களிலும் இன்று ஆத்மசாந்திய வேண்டிய பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்தின் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்து ஆலயங்களிலும் மக்களின் பங்களிப்பின்றி விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திலும் ஆலய தலைவர் க.கிருஸ்ணமூர்த்தி தலைமையில் குறித்த நேரத்தில் ஆலய மணி ஒலிக்கப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றதுடன் மௌன அஞ்சலியும் பிரார்த்தனையும் ஒழுங்கு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன் பின்னர் கருத்து தெரிவித்த ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ப.கு.கேதீஸ்வரக்குருக்கள் ஊரடங்கு சட்டகாலத்திலும் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டிய பிரார்த்தனைகள் மக்கள் பங்களிப்பின்றி இடம்பெற்றது.
எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்வோடு வாழவேண்டும் என பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறினார்.

