சுகாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எளிமையான முறையில் புத்தாண்டை வரவேற்ற உலக மக்கள்!


கடந்த ஒருவருட காலமாக நீடிக்கும் சுகாதார நெருக்கடிக்கு மத்தியில், உலகம் முழுவதும் 2020ஆம் ஆண்டுக்கு விடை கொடுத்து புத்தாண்டை மக்கள் வரவேற்றுள்ளனர்.
2020ஆம் ஆண்டு உலகம் பலத்த சுகாதார நெருக்கடியை எதிர்கொண்ட ஓர் ஆண்டாகும். உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸின் தாக்கத்தால் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்ததுடன் பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் புத்தாண்டை உலகளாவிய மக்கள் வரவேற்றுள்ளனர். தொடர்ந்தும் சுகாதார கட்டுப்பாடுகள், எல்லை முடக்கங்கள் பல நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் புதிய வருடம் பிறந்துள்ளது.
அதனடிப்படையில், வழக்கம் போலவே முதன் முதலாக நியூஸிலாந்தில் புத்தாண்டு வரவேற்கப்பட்டது.
அந்நாட்டின் பிரதான பகுதிகளான கிஸ்போர்ன், தி கோரோமெண்டால், சென்ட்ரல் ஒட்டாகோ மற்றும் டொரங்கா ஆகிய பகுதிகளில் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் வான வேடிக்கை நிகழ்த்தி புத்தாண்டை வரவேற்றனர்.
மேலும் அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் வான வேடிக்கைகளுடன் 2021ஆம் ஆண்டு வரவேற்கப்பட்டு போதும் சுகாதார நெருக்கடி காரணமாக அங்கு பொதுமக்கள் ஒன்றுகூட அனுமதி அளிக்கப்படவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படும் லண்டன் வீதிகள் பொலிஸாரினால் வழங்கப்பட்ட எச்சரிக்கையினை தொடர்ந்து வெறிச்சோடிக் காணப்பட்டன.
எனினும், இங்கிலாந்தின் பிரதான கொண்டாட்ட மையங்களில் பெருமளவான வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.
இதேவேளை நாடளாவிய முடக்கம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் ஜேர்மனியில், பட்டாசுகள் உள்ளிட்ட கொண்டாட்ட பொருட்கள் விற்பனை செய்வதற்கு அந்நாட்டு அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது இடங்களில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமான மக்கள் ஒன்றுகூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நெருக்கடியான கடந்த ஆண்டில் தமது உறவுகளை இழந்துள்ள மக்களை அனைவரும் நினைவுகூர வேண்டும் என அந்நாட்டின் அதிபர் அங்கெலா மேர்க்கல் தெரிவித்துள்ளார்.
இத்தாலியில், 31ஆம் திகதி இரவு 10 மணி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள அதேவேளை மதுபான கடைகள் உணவகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன.
மேலும், புத்தாண்டு சிறப்பு திருப்பலி வழக்கம் போல பரிசுத்த பாப்பரசர் தலைமையில் இடம்பெறவில்லை எனவும் கடுமையான இடுப்பு வழியால் அவர் அவதிப்படுவதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
இதேவேளை நெதர்லாந்தில் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் ஆம்ஸ்டெர்டாமில் உள்ள கால்பந்து மைதானத்தில் வழக்கமான வரவேற்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.
மேலும் பல நாடுகளில், முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எளிமையான புத்தாண்டு வரவேற்புகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



