கடலரிப்பால் காவு கொள்ளப்படும் மணற்சேனை சுற்றுலா மையம் – கவனம் செலுத்துமாறு அரசிடம் கோரிக்கை!!

வி.சுகிர்தகுமார்
நாட்டின் அந்நியச்செலாவணி வருமானத்தில் சுற்றுலாத்துறையின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். இத்துறையை ஊக்குவிப்பதால் சிலருக்கு நேரடியாகவும், பலருக்கு மறைமுகமாகவும் தொழில்வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன.
புவியியல் அமைவிடம், காலநிலை, இயற்கை அழகு, கொட்டிக்கிடக்கும் வளம், மற்றும் விருந்தினர்களை உபசரிக்கும் தன்மை என பல்வேறு காரணங்களால் இலங்கையானது உலகின் பல்வேறு நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு பார்த்தே ஆகவேண்டிய ஒரு நாடாக அவர்களின் பட்டியலில் இடம்பிடித்து வந்துள்ளது.
இதன் காணமாக அரசாங்கம் இலங்கையில் உள்ள சுற்றுலாத்துறை பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் பணிகளையும் அவ்வப்போது சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் சுற்றுலாப்பிரதேசங்களுக்கு பெயர் பெற்ற கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டத்தில் உள்ள அறுகம்பை பிரதேசத்திற்கு அன்மித்த கோமாரி மணற்சேனை லைட்ஹவுஸ் கடற்கரை பிரதேசத்தை மையமாக கொண்டு அமைந்துள்ள சுற்றுலா பகுதிகள் கடலரிப்பு காரணமாக அழித்தொழிக்கப்படும்; நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இயற்கைமிகு நீரலை சறுக்கல் பகுதி அமைந்துள்ள குறித்த கடற்கரை பிரதேசத்தில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ஆரம்பிக்கப்பட்ட சுற்றுலா விடுதிகளும் அதனோடினைந்த பயன்தரு தென்னை மரங்களும் கடலரிப்பால் நாளாந்தம் காவு கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனால் கவலை அடைந்துள்ள உல்லாசத்துறையினை நம்பி வாழும் இப்பகுதி ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட மறைமுக தொழிலாளர்களும் பொதுமக்களும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
தமது வாழ்நாளில் கண்டிராத கடலரிப்பு தற்போது நிகழ்ந்துள்ளதாகவும் இதற்கான காரணத்தை பலர் பலவாறு கூறினாலும் அரசாங்கம் துரிதமாக நடவடிக்கையினை எடுத்து தம்மை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரி;க்கை விடுக்கின்றனர்.
இதேநேரம் குறித்த பிரதேசத்தில் கடலானது சுமார் 25 மீற்றர் உள்நோக்கி நுழைந்துள்ளதையும் இதனால் அப்பகுதியில் நடப்பட்டிருந்த இயற்கை அழகு மிகு மரங்களும் பயன்தரு தென்னை மரங்களும் கண்முன்னே கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுவதும் கவலை தரும் விடயமாக பார்க்கப்படுகின்றது. சில தென்னை மரங்களை அருகில் உள்ள இன்னுமொரு மரத்துடன் கயிற்றினால் கட்டி உரிமையாளரால்; பாதுகாக்க முற்படுகின்றமை மரங்களை பாதுகாக்க அவர்கள் மேற்கொள்ளும் பிரயத்தனத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.
இந்நிலையில் சிசிடி மற்றும் யுடிஏ அனுமதியுடன் அமைக்கப்பட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் கடலரிப்பு காரணமாக மற்றுமொரு சிக்கலையும் எதிர்கொண்டுள்ளனர். சிசிடி மற்றும் யுடிஏ யின் சட்டதிட்டங்களுக்கு அமைய 50 மீற்றருக்கும் அப்பால் அப்போது ஹோட்டல் கட்டடங்கள் நிர்மானிக்கப்பட்டது. ஆனால் தற்போது கடலரிப்பு காரணமாக கடற்பகுதி 25 மீற்றர் உள்நோக்கி நுழைந்துள்ளது. இதனால் சிசிடி மற்றும் யுடிஏ யினால் அனுமதிக்கப்பட்ட 50 மீற்றர் இடைவெளி குறைவடைந்துள்ள நிலையில் பிழையான எல்லைக்குள் கட்டடம் அமைந்துள்ளதாக கருதப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. இதனால் தொடர் அனுமதி தொடர்பிலும் நடைமுறைச்சிக்கல் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு சிசிடியினால் கடற்கரை பகுதியில் போடப்பட்ட மாயக்கல்லுகள் கூட கடலுக்குள் சென்று விட்டதையும் அவதானிக்க முடிந்தது. இதன் காரணமாக ஹோட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தி தீர்வை பெற்றுக்கொடுத்து வளர்ச்சியடைந்துவரும் உல்லாசதுறைக்கு கைகொடுக்குமாறு அவர்களால் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.