சிறுவர் மந்த போசணையை ஒழிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையுடன் இணக்கப்பாடு!

சிறுவர் மந்த போசணையை ஒழிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
2030ஆம் ஆண்டளவில் சிறுவர் மந்த போசணையை ஒழிப்பதற்கு ஐக்கிய நாடுகளினதும் உலக வங்கியினதும் அழைப்பை ஏற்றுக்கொண்டமைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நன்றி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
உடனடி உணவு மற்றும் போசணை குறைந்த உணவுப் பழக்கத்தினால் சிறுவர்கள் மந்த போசணையை எதிர்நோக்கியுள்ளதாக ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மந்த போசணையை குறைப்பதற்கு வறுமையை ஒழிப்பது முக்கியம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி, இதற்காக மக்கள்மயப்படுத்தப்பட்ட பொருளாதார திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கும் என கூறியுள்ளார்.
சுகாதாரத்துறை மற்றும் கிராமிய பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து ஜனாதிபதி இதன்போது தெளிவுபடுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.