இலங்கை

சிறந்த நாட்டையும், எதிர்கால தலைமுறையையும் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் ; ஜனாதிபதி

நாட்டில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்தும் அதேவேளை, பிரச்சினைகளை சரியான முறையில் இனங்கண்டு சிறந்த நாட்டையும் சிறந்த எதிர்கால தலைமுறையையும் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

 

கண்டி மாவட்ட ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா தொழில் வழிகாட்டல் நிலையத்தை இன்று (15) முற்பகல் திறந்து வைத்ததன் பின்னர் கட்டுகஸ்தோட்ட ராகுல வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா இளைஞர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

திறன்மிக்க இளைஞர் சமுதாயத்தை வலுவூட்டுவதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள கண்டி மாவட்ட ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா தொழில் வழிகாட்டல் நிலையம் இன்று முற்பகல் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டதுடன், கட்டுகஸ்தோட்டை பிரதேச செயலகத்திற்குரிய கட்டிடத்தில் சகல வசதிகளையும் கொண்டதாக இந்த நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து தொழில் வழிகாட்டல் நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அதனை பார்வையிட்டதுடன். அங்கு வருகை தந்திருந்த இளைஞர், யுவதிகளுடன் சுமூக கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து பெருமளவிலான இளைஞர் யுவதிகளின் பங்குபற்றலுடன் இளைஞர் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, நாட்டில் அனைத்து பிள்ளைகளுக்கும் இளைஞர், யுவதிகளுக்கும் நியாயமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக கடந்த நான்கு வருடங்களாக பல்வேறு கடமைகளை நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார். இன, மத பேதமின்றி நாட்டின் அனைத்து பிள்ளைகளுமே தமது பிள்ளைகளாவர் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவர்களுக்கான தனது கடமைகளை தவறாது நிறைவேற்றுவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, தற்போது தொடர்ச்சியாக அறியக் கிடைக்கும் பகிடிவதை தொடர்பிலும் கருத்து தெரிவித்ததுடன், இதனால் அழுத்தங்களுக்கு உட்படுவது தமது சகோதர சகோதரிகளே என்பதை எவரும் மறந்துவிடக் கூடாதெனத் தெரிவித்தார்.

அரசியல் நோக்கமின்றி இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலத்திற்காகவே உருவாக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தின் ஊடாக இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலத்திற்கான விரிவான வேலைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

கண்டி மாவட்ட ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தின் பொறுப்புக்களை கையளிக்கும் கடிதங்களும் இதன்போது ஜனாதிபதி அவர்களால் வழங்கிவைக்கப்பட்டன.

ஆளுநர்களான சரத் ஏக்கநாயக்க, ரஜித் கீர்த்தி தென்னகோன், இராஜாங்க அமைச்சர் புத்திக்க பத்திரன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார உள்ளிட்ட மாகாண மக்கள்  பிரதிநிதிகளும் கண்டி மாவட்ட செயலாளர் டி.எம்.என்.ஜி.கருணாரத்ன, இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி ரவி ஜயவர்தன, ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா பணிப்பாளர் நாயகம் எரிக் பிரசன்ன வீரவர்தன உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதனிடையே பல்லேகல மாகாண ஆயுர்வேத மருத்துவமனையில் 100 கட்டில்களைக் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வாட்டுத்தொகுதியும் இன்று ஜனாதிபதியினால் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

மருத்துவமனையில் நீண்டகாலமாக நிலவிவந்த குறைபாட்டினை நிவர்த்திக்கும் வகையிலும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையிலும் மத்திய மாகாண ஆயுர்வேத திணைக்களத்தின் நெறிப்படுத்தலில் இந்த புதிய வாட்டுத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

வாட்டுத்தொகுதியை திறந்துவைத்த ஜனாதிபதி, அதனை பார்வையிட்டதுடன், அங்கு அனுமதிக்கப்பட்ட முதலாவது நோயாளியையும் பதிவு செய்தார்.

மக்களின் நலனோம்பு தேவைகளுக்காக 17 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு லொறிகள் இதன்போது ஜனாதிபதி அவர்களால் குறித்த மருத்துவமனைக்கு கையளிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி வசந்தா பெரேரா மற்றும் மாகாண ஆயுர்வேத மருத்துவமனையின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் திருமதி சுனேத்ரா டயஸ் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker