கொரோனா தொற்றுக்கு உள்ளான மாணவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நோர்வூட் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் இருவரும் கொவிட் – 19 தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அழைத்துச் செல்லப்பட்டனர்.
வைரஸ் தொற்றியுள்ள மாணவி மாத்தறை கம்புறுபிட்டியவில் உள்ள சிகிச்சை நிலையத்துக்கும் மாணவன் ஹம்பாந்தோட்டையிலுள்ள சிகிச்சை நிலையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் பணியாற்றும் ஆசிரியையொருவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன.
பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று 12ஆம் திகதி வெளியாகின. இதில் குறித்த பாடசாலையில் தரம் 9 இல் கல்வி பயிலும் மாணவவருக்கும் மாணவிக்கும் வைரஸ் தொற்றிருப்பது கண்டறியப்பட்டது.
இந்த நிலையிலேயே, அவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 12 குடும்பங்களைச் சேர்ந்த 60இற்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.