கிழக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 144ஆக பதிவு

கிழக்கு மாகாணத்தில் மேலும் 13 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தின் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 144ஆக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுச்சந்தையில் எழுந்தமானமாக 20 பேர் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை இனங்காணப்பட்டது.
இதேபோன்று கல்முனை சுகாதார பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையின்போது ஒருவருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் பீசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதில் காத்தான்குடியில் எடுக்கப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் ஏற்கனவே தொற்றாளருடன் தொடர்புபட்ட ஒருவருக்கும் கொழும்பில் இருந்து திரும்பிய இன்னுமொரு நபருமாக இரண்டு நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்களாவர். இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தின் தொற்று எண்ணிக்கையானது 144ஆக அதிகரித்துள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.