வடக்கு மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை வழங்குவதாக மஹிந்த உறுதி

அரசியல்கைதிகளின் விடுதலை, காணாமற்போனோர் பிரச்சினை மற்றும் காணி விடுவிப்பு உள்ளிட்ட வடக்கு மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வினை முன்வைப்பதாக மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார் என்று வடக்கின் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
யாழில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ரெஜினோல்ட் குரே மேலும் கூறியுள்ளதாவது, தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவற்றுக்கான தீர்வினைக் கொடுக்காமல் தமிழர்களின் மனங்களை முழுமையாக வெல்ல முடியாது என்பதை நாம் நன்றாக அறிவிவோம்.
அந்தவகையில், இம்முறை இதற்கான ஓர் அருமையான வாய்ப்பொன்று கிடைத்துள்ளது என்றே கூறவேண்டும். அதாவது நீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகள், காணாமற்போனோர் பிரச்சினை, காணி விடுவிப்பு உள்ளிட்டவற்றுக்கு நாம் தீர்வினை விரைவில் முன்வைக்க வேண்டும்.
இதற்காக நான் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷவுடன் நான் கலந்துரையாடியபோது, அவர்கள் இதற்கானத் தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள். ஏற்கனவே, மஹிந்த ராஜபக்ஷ 10 ஆயிரத்துக்கும் அதிகமாக அரசியல் கைதிகளை விடுதலை செய்திருந்தார்.
இந்நிலையில் தற்போதுள்ள நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளை விடுதலை செய்வது அவருக்கு ஒன்றும் பாரிய விடயமல்ல.
இதற்கான உறுதியை கோட்டாபய ராஜபக்ஷவும் வழங்கியுள்ளார். அதேபோல், வடக்கில் மட்டுமன்றி, தெற்கிலும் காணாமல்ஆக்கப்பட்டோரது பிரச்சினை நீடித்து வருகிறது.
காணாமல் ஆக்கப்படோருக்கு அரசாங்கம்தான் பொறுப்பு என்று நாம் பொதுப்படையாகக் கூற முடியாது. ஏனெனில், வடக்கில் பல்வேறு தரப்பினரால் கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இராணுவத்தினர் கூட கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். எனவே, இந்த பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாகக் கருதாமல், அனைத்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகவும் ஒரு பொதுவான நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையாக இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.