அக்கரைப்பற்று சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி: தாக்குதலை மேற்கொண்டவர் கைது

வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் அக்கரைப்பற்று நகர் பிரிவு 5இல் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மீதாக நேற்று(22) மாலை இடம்பெற்ற தாக்குதல் இதனை உறுதி செய்யும் வண்ணம் அமைந்துள்ளது.
இதனால் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் தமது பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.
அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட நகர்
பிரிவு 5இல் பிரிவில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஜ.எம்.றமீஸ் கடமையில் இருந்தபோது பொதுமகன் ஒருவரால் தாக்கப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்வாறு சிகிச்சை பெற்றுவரும் உத்தியோகத்தரை அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்க உபதலைவரும் அம்பாரை மாவட்ட தலைவருமான ஜ.எச்.அப்துல் வஹாப் மற்றும் மாவட்ட செயலாளர் டி.எம்.சமந்த திசாநாயக்க எம்.எம்.எம்.சலீம் உள்ளிட்டவர்கள் இன்று காலை சென்று நலன் விசாரித்தனர்.
இதன்போது குறித்த உத்தியோகத்தர் தெரிவிக்கையில்…..5000 ரூபா கொடுப்பனவை பொருளாதார அபிவிருத்த உத்தியோகத்தர் உள்ளிட்டவர்களுடன் பிரிவில் வைத்து வழங்கிவிட்டு உபதபால் வீதியை அடைந்தபோது பொதுமகன் ஒருவர் குறுக்கீடு செய்து தனக்கும் 5000 ரூபா வழங்குமாறு கேட்டார் இதற்கு பதிலளித்த நான்; நீங்கள் பிறிதொரு பிரிவில் பணம் பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்த பின்னர் பணத்தை நாளை தருவாதாக கூறினேன். இந்நிலையில் இப்போதே பணம் தரவேண்டும் என தெரிவித்த அவர் எனது ஆவணங்களையும் பறித்து என் தலை மற்றும் கை மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளார். ஆகவே இவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன் பின் அப்பிரிவிற்கு செல்லும் உத்தியோகத்தர் எவருக்கும் இந்நிலை ஏற்படாமல் இருக்க எடுக்கும் நடவடிக்கை உதாரணமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்க உபதலைவரும் அம்பாரை மாவட்ட தலைவருமான ஜ.எச்.அப்துல் வஹாப் …… 5000 ரூபா கொடுப்பனவை இரவு பகல் பாராது உயிரையும் துச்சமென நினைத்து வழங்கிவரும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
நாடளாவிய ரீதியில் இடம்பெறும் இவ்வாறான செயற்பாடுகளால் உத்தியோகத்தர்கள் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
மேலும் எமது உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான சேவையை பாராட்டுவதுடன் அவர்களுக்கான வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் பாதுகாப்பு உபகரணங்களை அதிகாரிகள் வழங்குவதுடன் பொதுமக்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வை பெற்றுக்கொள்ளுமாறும் எக்காரணத்தை கொண்டும் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடாத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதேநேரம் தாக்குதலுக்குள்ளான சமூர்த்தி உத்தியோகத்தர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அக்கரைப்பற்று பொலிசார் குறித்த நபரை நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் இன்று அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்தனர்.