இலங்கை

சட்டவிரோத சொத்துக்குவிப்பு இவ்வருடம் 65 பேருக்கு எதிராக நடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் முறைகேடான விதத்தில் சொத்துக்களை ஈட்டிய 65 சந்தேகநபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான எப்.யு.வுட்லர் தெரிவித்தார்.

பத்தரமுல்லை பகுதியில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;

போதைப்பொருள் வர்த்தகம், மோசடி உள்ளிட்ட குற்றச்செயல்களின் மூலம் முறையற்ற விதத்தில் ஈட்டப்படும் சொத்துகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் சொத்துக்குவிப்புத் தொடர்பில் பொலிஸாரால் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பணச் சுத்திகரிப்பு தடுப்பு சட்டத்துக்கமைய விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 65 சந்தேகநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்தோடு 2024 மற்றும் 2025 ஆகிய இரு வருடங்களிலும் அவ்வாறு சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட 354 பவுன் தங்கம், 77 வாகனங்கள், 30 வீடுகள், 1197 பேர்ச்சஸ் காணி மற்றும் 3539 இலட்சம் ரூபா ரொக்கப்பணம் என்பன அரசுடமையாக்கப்பட்டுள்ளன அல்லது முடக்கப்பட்டுள்ளன. மேலும் குருநாகல், இப்பாகமுவ பகுதியில் வெளிநாடு சென்று தலைமறைவாகி, நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து வரும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் வழிகாட்டலின் பேரில் போதைப்பொருள் வர்த்தகம் மூலம் பெறப்பட்ட சொத்துகளுடன் திங்கட்கிழமை (19) அன்று சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபரிடமிருந்து ஒரு கோடியே 99 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சொகுசு வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்திருந்த 28 கோடியே 33 இலட்சம் ரூபா பணமும் முடக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் இவ்வாறான குற்றச்செயல்களை முடிவுக்குக் கொண்டுவர பொதுமக்கள் தொடர்ந்து தகவல்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன். சந்தேகத்திற்கிடமான நபர், வீடு, காணி மற்றும் வாகனங்கள் இருப்பின் அவை தொடர்பாக 1818 என்ற இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என்றார்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker