கோளாவில், அம்பாள் விளையாட்டு மைதானத்தில் 15 இலட்சம் ஒதுக்கீட்டில் விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு….

வி.சுகிர்தகுமார்
இலங்கை நாடு ஒரு இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ சொந்தமானதல்ல அனைத்து மக்களுக்கும்; உரித்தானது. ஆகவே அனைவரும் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டியதே இன்றை தேவைப்பாடு என அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவருமான டபிள்யு டி வீரசிங்க தெரிவித்தார்.
எனது தந்தை யாழ்ப்பாணத்திற்கு செல்வார். அதுபோல் அவரது நண்பர் எங்களது ஊருக்கு வருவார். எனது தாய் தந்தைக்கு தமிழ் தெரியும். அவரது நண்பருக்கு சிங்களம் தெரியும். இது முப்பது வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலை. ஆனால் எனக்கு தற்போது தமிழ் தெரியாது. அதுபோல் இன்றைய இளம் தமிழ் சமூகத்திற்கு சிங்களம் தெரியாது. இது எமது தவறல்ல. கடந்த கால யுத்தமும் பிரிவினைவாத செயற்பாடுகளுமே காரணம். இதனை நாம் மறந்து கடந்தகாலம்போல் ஒன்றாக செயற்பட்டு நாட்டை கட்டியெழுப்புவோம் என்றார்.
அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கோளாவில் 03 அம்பாள் விளையாட்டு மைதானத்தில் 15 இலட்சம் ஒதுக்கீட்டில் அமையவுள்ள பகல் இரவு கரப்பந்து விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
கிராமத்திற்கு ஒரு மைதானம் எனும் அரசாங்கத்தின் மைதான அபிவிருத்தி திட்டத்திற்கு அமைய இலங்கைத்திருநாட்டின் 332 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மைதானங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல்ராஜபக்ச மற்றும் இராஜாங்க அமைச்சர் தேனுகா விதானகேயின் அறிவுறுத்தலுக்கமைவாக இத்திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைவாக இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவருமான டபிள்யு டி வீரசிங்க கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
முன்னதாக வருகை தந்த அவருக்கு பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கிராம மக்கள் இணைந்து மகத்தான வரவேற்பளித்தனர். பின்னர் ஸ்ரீ சித்தவிநாயகர் ஆலயத்தில் சிவஸ்ரீ க.தவேந்திரக்குருக்களால் நடாத்தி வைக்கப்பட்ட பூஜை வழிபாடுகளிலும் அதிதிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மைதானத்தில் இடம்பெற்ற அடிக்கல் நடும் நிகழ்விலும் கூட்டத்திலும் அனைவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வுகளில்; உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் பிரதேச சபை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளருமான கிந்துஜா பிரதீபன் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தலைவர் கே.நாகலிங்கம் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள் பிரதேச செயலக அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.