ரஷ்ய பிரதமர் தலைமையிலான அரசாங்கம் பதவி விலகியுள்ளது!

ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ் தலைமையிலான அரசாங்கம் பதவி விலகியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை பரிந்துரைத்த சில மணி நேரங்களில் ரஷ்ய பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு அந்நாட்டின் அரசியல் அமைப்பில் மாற்றம் ஏற்படுத்த சந்தர்ப்பம் அளிப்பதே இதற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதியை அருகில் வைத்துக்கொண்டு பிரதமர் அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
பிரதமரின் இந்த தீர்மானத்திற்கு ரஷ்ய ஜனாதிபதியும் நன்றி தெரிவித்துள்ளார்.
விளாடிமிர் புட்டின் பரிந்துரைத்துள்ள அரசியலமைப்பு சீர்திருத்தத்தின்படி, ஜனாதிபதி பதவியை வலுவற்றதாக்கி பிரதமருக்கும் நாடாளுமன்றத்துக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
ஏற்கனவே நான்கு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ள விளாடிமிர் புட்டின் தனது தற்போதைய பதவிக் காலத்துக்குப் பின்னர் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள இந்த சீர்திருத்தம் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.