கொறோனா தொற்றுடையவர் இனங்காணப்பட்டதன் பிரதிபலிப்பு – ஊரடங்கு தளர்த்தப்பட்டபோதும் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் நடமாட்டம் குறைவு

வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்டத்தில், அக்கரைப்பற்றில் முதலாவது கொறோனா தொற்றுடையவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து மக்களை பாதுகாக்கின்ற செயற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதிகமான பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
நேற்றைய தினம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்றுடையவர் ஒருவர் சுகாதார துறையினரால் இனங்காணப்பட்டார்.
இதனை தொடர்ந்து குறித்த பிரதேசத்தை தொற்று நீக்கும் நடவடிக்கையினை கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை மேற்கொண்டதுடன் மேலதிக நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டபோதும் பல பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. அக்கரைப்பற்று பொதுச்சந்தையில் பெரும்பாலான வியாபார நிலையங்கள் மூடப்பட்டடிருந்ததுடன் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள சதோசா மற்றும் உதயம் போன்ற பெரும் வியாபார நிலையங்களும் மூடப்பட்டன.
ஆயினும் சாகாமம் பிரதான வீதியின் ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த வியாபார நிலையங்களில் மக்கள் கூட்டம் வழமையை விட சற்று குறைவான நிலையில் காணப்பட்டது. அத்தோடு அதிகளவான பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி இருந்ததையும் பிரதேச சபை இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.
இதேநேரம் சந்தையில் சில பொருட்களின் விலையில் தளம்பல் நிலை காணப்பட்டதுடன் முட்டையின் விலை அதிகரித்து இருந்ததையும் காண முடிந்தது.
இது இவ்வாறிருக்க அரச வங்கிகள் உள்ளிட்ட சில வங்கிகளில் அன்றாட நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டிருந்ததுடன் பெருந்திரளான மக்கள் வங்கிகளின் முன்னால் சமூக இடைவெளியை பேணி வரிசையாக நின்றதையும் இராணுவமும் பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்ததையும் குறிப்பிட முடிகின்றது.