சுவாரசியம்
கொரோனோவால் 27 ஆயிரம் ஊழியர்களை கட்டாய விடுமுறையில் அனுப்பும் விமான நிறுவனம்

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
ஹொங்கொங்கை தலைமையாக இயங்கும் கதே பசிபிக் (Cathay Pacific) விமான நிறுவனம் கொரோனோ வைரஸால் வீழ்ச்சியை சந்தித்த கதே பசிபிக் விமான நிறுவனம் 27 ஆயிரம் ஊழியர்களையும் சம்பளமில்லா கட்டாய விடுமுறையில் எடுத்துக் கொள்ள கேட்டுக் கொண்டுள்ளது.

சைனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகர் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் அங்குள்ள அனைத்து மாகாணங்களிலும் பரவியது. மேலும் சைனாவின் கட்டுப்பாட்டிலிருக்கும் ஹொங்கொங், மக்காவு உள்ளிட்ட பிரதேசங்களிலும் கொரோனா வைரஸ் பரவி விட்டது.
இந்த உயிர்க்கொல்லி நோயால் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வரும் அதே வேளையில் சீனாவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்டவை கடுமையாக பாதிப்பை சந்தித்துள்ளன. அதிலும் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவிலிருந்து புறப்படும் மற்றும் சீனாவுக்கு செல்லும் விமானங்களை பெரும்பாலான நாடுகள் ரத்து செய்து விட்டதால் விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன.
அந்த வகையில் ஹொங்கொங்கில் தொடர் போராட்டத்தால் ஏற்பட்ட இழப்பிலிருந்து அண்மையில் மீண்டு வந்த கதே பசுபிக் விமான நிறுவனம் கொரோனோ வைரசால் மீண்டும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக கதே பசுபிக் நிறுவனத்தில் பணியாற்றும் 27 ஆயிரம் ஊழியர்களையும் சம்பளமில்லா கட்டாய விடுமுறை எடுத்துக்கொள்ள அதன் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.