இலங்கை
தமிழர்களின் போராட்ட வரலாற்றை அழிந்தவர்கள் இன்று அம்பாரை மாவட்ட மக்களின் அடையாளத்தை அழிப்பதற்கும் முயற்சி செய்கின்றனர்

வி.சுகிர்தகுமார்
தமிழர்களின் போராட்ட வரலாற்றை அழிந்தவர்கள் இன்று அம்பாரை மாவட்ட மக்களின் அடையாளத்தை அழிப்பதற்கும் முயற்சி செய்கின்றனர் என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச இந்து ஆலயங்களின் ஒன்றியம் தைப்பூச நாளில் பெருமையுடன் நடாத்திய இனிய பொங்கல் விழா நேற்று ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் (08) மிகவும் கோலகலமான முறையில் எழுச்சி பூர்வமாக நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச இந்து ஆலயங்களின் ஒன்றிய தலைவர் மு.குழந்தைவடிவேல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தமிழர்களின் அடையாளங்கள் பண்பாடுகள் அழிந்து கொண்டு செல்லும் நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் இவ்வாறான இந்துக்களின் பாரம்பரிய நிகழ்வுகள் அவர்கள் வாழும் பிரதேசங்களுக்கான அங்கீகாரத்தை வழங்கும் என கூறினார்.
இப்பணியினை சிறப்பாக முன்னெடுத்த அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச இந்து ஆலயங்களின் ஒன்றியத்தினருக்கு தமது பாராட்டினையும் வாழ்த்தினையும் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதேநேரம் கடந்த காலத்தில் தமிழர்களின் வாழ்வை பேரினவாத சக்திகளுடன் இணைந்து அழிப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் இன்று அம்பாரை மாவட்டத்தினுள் உள்நுழைந்திருக்கின்றனர் எனவும் இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றுகின்ற இவ்வாறான நிகழ்வுகள் கூட இடம்பெறக்கூடாது என்பதில் அவர்கள் அக்கறையுடன் உள்ளதாகவும் அவ்வாறு குறுகிய காழ்ப்புணர்ச்சி கொண்ட சிந்தனையுடன் இருக்கின்ற ஒரு சிலர் இணைந்து பொங்கல் விழாவை தடுப்பதற்கு முயற்சியினை மேற்கொண்டதாகவும் அதனையும் தாண்டி இவ்விழா மக்களது ஒத்துழைப்பின் பேரில் சிறப்பாக நடைபெற்றுள்ளதாகவும் கூறினார்.