சாகாமம் நீத்தையாறு பிரதேசத்தில் யானையின் தாக்குதலுக்குள்ளாகிய வயோதிப விவசாயி தெய்வாதீனமாக உயிர் பிழைத்தார்!
வி.சுகிர்தகுமார்
பலத்த காயங்களுக்குள்ளான அவர் அங்கிருந்தவர்களின் உதவியுடன் 1990 சுவசரிய அம்புலன்ஸ் சேவையினூடாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தை சேர்ந்த திருமால் என அழைக்கப்படும் வயோதிப விவசாயி ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியதாக தெரியவருகின்றது.
குறித்த நபர் வழமைபோன்று வயல் காவலில் ஈடுபட்டிந்த சமயத்திலேயே அந்த பகுதியினூடாக சென்ற யானையினால் தாக்கப்பட்டுள்ளார்.
இதனை கண்ணுற்ற அயலில் இருந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதி;ப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இது இவ்வாறிருக்கு இன்று காலை வேளையில் நான்கு யானைகள் இப்பகுதியில் உட்புகுந்துள்ளதாக நேரில் கண்ட விவசாயிகள் தெரிவித்தனர்.
இதேநேரம் குறித்த பகுதியில் சிறுபோகச் செய்கை மேற்கொள்ளப்பட்டு குடலை பருவத்தை அடைந்து வரும் நிலையில் யானைகளின் அட்டகாசம் தலை தூக்கியுள்ளமை விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கமெல்லாம் அவ்வப்போது யானை வேலி அமைத்து தருவதாக உறுதியளித்து வருகின்ற போதிலும் இதுவரையில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் விவசாயிகளிடையே
அரசின் மீதுள்ள நம்பிக்கையை இல்லாமல் செய்துள்ளது.