இலங்கை

புதிய அரசியலமைப்பு வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதிப்போம் – பிரதமர்

புதிய அரசியலமைப்பு வரைவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.

ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட நிறுவனங்களின் செலவின தலைப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”உலகளாவிய கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் நாம் அரசாங்கம் என்ற ரீதியில் மக்களை பாதுகாப்பதற்கே முன்னுரிமை வழங்கினோம். மக்களின் பாதுகாப்பிற்காக நாம் உரிய நேரத்தில் சகல தீர்மானங்களையும் மேற்கொண்டோம் என்பதனை நாம் உங்களுக்கு நினைவூட்ட வேண்டும்.

அப்பணியை நிர்வகிப்பதற்காக பிரதமர் அலுவலகம் மேற்கொண்ட பணிகளை நினைவூட்டும் முகமாகவே நான் இவ்விடயத்தை கூறுகின்றேன்.

கொவிட் தொற்றின் ஆரம்பத்தில் எமது அரசாங்கம் அத்தியவசிய சேவைகளுக்காக ஜனாதிபதி செயலணியொன்றை நிறுவியது.

அந்த ஜனாதிபதி செயலணியின் ஊடாக பிரதமர் அலுவலகத்திலிருந்து எமது கண்காணிப்பின் கீழ் மக்களின் அத்தியவசிய சேவைகளை நிறைவேற்றுவதற்கும், மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஒரு நாளின் 24 மணிநேரமும் பிரதமர் அலுவலகம் செயற்பட்டது என்பதை நாம் உங்களுக்கு நினைவுபடுத்த வேண்டும்.

அத்துடன் நாம் கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்தோம். மக்களுக்கு அத்தியவசிய சேவைகள் மற்றும் சுகாதார வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்நின்றோம். வைத்தியர்கள், பாதுகாப்பு படையினர் ஆகியோர் அதற்காக தமது கடமைகளை நிறைவேற்றினர்.

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை நாட்டை கடுமையாக பாதித்துள்ளது என்பதை நாம் அறிவோம். பெரும்பாலான தொழில்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. கொவிட் தொற்றிலிருந்து வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் இப்போது திட்டமிட்டுள்ளது. அதன்படி குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை உள்ளடக்கிய வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் இம்முறை சமர்பித்தார்.

மக்களின் சார்பிலான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி நாட்டிற்கு தேவை. இந்த கடினமான சூழ்நிலையில் அம்மக்கள் மீண்டெழக் கூடியதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

2019ஆம் ஆண்டில் நாம் வீழ்ச்சியடைந்த பொருளாதாரமொன்றையே பொறுப்பேற்றோம் என்பதையும் நினைவுகூர வேண்டும். இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழமை போல் சொந்த அரசியலுக்காக விவாதம் செய்வதை பார்த்தோம். இருப்பினும் எதிர்கட்சிகளின் நேர்மறையான கருத்துகளுக்கு நாம் செவிமடுக்கிறோம். நீங்கள் சாதகமான கருத்துக்களை கூறினால் அவற்றிற்கு செவிமடுக்க நாம் தயாராக இருக்கிறோம். இத்தருணத்தில் நாட்டின் எதிர்காலத்திற்காக நாம் கூட்டாக தீர்மானங்களை எடுக்க வேண்டும். மக்களுக்காக அந்த கடமையை நிறைவேற்றுவதற்கு இந்த உயரிய நாடாளுமன்றத்தில் சகல உறுப்பினர்களுக்கும் திறன் உள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான புதிய வணிகங்களைப் பதிவு செய்யும் தொழில்முனைவோரிடமிருந்து நாம் எந்தப் பதிவுக் கட்டணத்தையும் வசூலிக்கப் போவதில்லை. புதிய வர்த்தக சிந்தனைகளுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கட்டியெழுப்ப கைகோர்க்குமாறு எமது நாட்டு இளைஞர்களை அழைக்கின்றோம்.

மேலும் நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தருவதற்கும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மக்களுக்கு வாக்குறுதி அளித்தால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். ஏறக்குறைய 25 வருடங்களாக தீர்க்கப்படாத ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை இந்த வரவு செலவுத் திட்டத்தில் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்காக அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் எதிர்காலத்துக்காக இதையெல்லாம் செய்கிறோம். சவால்களுக்கு மத்தியில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான எமது முயற்சிகளுக்கு நீங்கள் அனைவரும் ஆதரவளிப்பீர்கள் என நம்புகின்றோம்.

எதிர்க்கட்சிகளின் முன்மொழிவுகள் மற்றும் விமர்சனங்களுக்கு நாங்கள் உன்னிப்பாகக் செவிமடுத்தோம். சில விமர்சனங்கள் நியாயமற்றவை. சில விமர்சனங்களில் ஏதேனும் நியாயம் இருப்பின், அவற்றை நாம் ஏற்று திருத்திக் கொள்ள எந்நேரத்திலும் தயாராக உள்ளோம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றேன். அரசியலமைப்பு பற்றிப் பேசினீர்கள்.

நாம் இப்போது வரைவைத் தயாரித்து வருகிறோம். அதனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் சமர்ப்பித்து விவாதிப்போம் என்பதை நினைவூட்டுகிறேன். எனவே, இந்த விவகாரத்தில் இரகசியமாக எதையும் செய்ய மாட்டோம் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன் என பிரதமர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker