கொரோனா அச்சம் காரணமாக ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்

வி.சுகிர்தகுமார்
பிரதேச சபையின் தவிசாளர் க.பேரின்பராசா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் மற்றும் ஆலையடிவேம்பு வர்த்தகர் சங்க தலைவர் ஆர்.ஜெகநாதன் கலந்து கொண்டதுடன் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச சபை உறுப்பினர்கள் தற்போது நமது பிரதேசத்தில் உருவாகியுள்ள கொரோனா அச்சம் காரணமாக மக்கள் பீதியடைந்துள்ளனர். இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே இவ் அச்சத்தை போக்கும் வகையிலும் கொரோனா நோய் பரவுதலை தடுக்கும் முகமாக சிறந்த ஓரு பொறிமுறையை கையாள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆகவே பிரதேச எல்லையினை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான நடவடிக்கை எவ்வாறு எடுக்க முடியும் எனவும் பல்விதமாக ஆராய்ந்தனர்.

அந்த வகையில் மிகவும் அத்தியாவசிய தேவைப்பாடான மரக்கறி உற்பத்தி பொருட்களை பெற்றுக்கொடுக்க ஆலையடிவேம்பு வர்த்தகர் சங்கம் முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்தார். இரண்டாவதாக பிரதேசத்தில் உள்ள பேக்கரிகளை முறையாக இயங்க செய்ய வேண்டும் என்பதுடன் ஏனைய உணவுபொருட்களையும் பெற்றுக்கொடுக்க ஆவண செய்ய வேண்டும் என்றார். அதன் பிற்பாடு பிரதேச எல்லையினை பாதுகாப்பது தொடர்பில் ஆராய முடியுமென்றார்.
இறுதியில் வர்த்தகர் சங்கம் மரக்கறி பொருட்களை வாகனங்களின் உதவியுடன் பெற்று பிரதேச எல்லைக்குள் விற்பனை செய்வதெனவும் ஏனைய விடயங்களுக்கும் அனைவரும் இணைந்து தீர்வு காண்பதெனவும் முடிவெடுக்கப்பட்டது.
மேலும் பிரதேச செயலாளர் தலைமையில் ஒன்று கூடி செயற்படாத நடமாடும் அனுமதி பெற்ற வியாபாரிகளை நீக்குவதெனவும் புதியவர்களை உள்வாங்குவதெனவும் முடிவெடுக்கப்பட்டது.
