தமிழ் பெண்களின் நெற்றிப்பொட்டு விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரிக்கை

கடவுசீட்டுக்கு தமிழ் பெண்கள் நெற்றிப்பொட்டு வைக்கும் விவகாரத்தில் சட்டங்களின் பெயரால் தமிழர் பாரம்பரியங்களை சிதைக்கவேண்டாம் என மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சண்.குகவரதன் கேட்டுக்கொண்டார்.
மேலும் இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுடன் தொடர்புகொண்டு நெற்றிப்பொட்டு விடயத்திற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதிதாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அல்லது தமது பழைய கடவுச்சீட்டை புதுப்பிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்றிப்பொட்டுடன் படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கைத்தீவில் வாழும் தமிழ் மக்கள் நீண்ட பாரம்பரியங்களையும் கலை கலாசாரங்களையும் பேணிப்பாதுகாத்து பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்றார்கள்.
இந்த நாட்டின் பிரஜைகள் என்ற சமத்துவத்திற்காக அவர்கள் ஏங்கி நிற்கின்ற சூழலில் மிகமுக்கிய விடயமாக கடவுச்சீட்டில் நெற்றிப் பொட்டை நீக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான அறிவிப்பொன்றை குடிவரவு, குடியகவல்வு திணைக்களம் செய்துள்ளமையானது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
நெற்றிப்பொட்டு வைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. நெற்றிப்பொட்டு வைப்பது பரம்பரை ரீதியாக கடத்தப்பட்ட பழக்கமாகவும் விஞ்ஞான ரீதியிலும் இன, மத, சமூக அடையாளகமாகவும் அது காணப்படுகின்றது.
போர் உக்கிரமாக நடைபெற்ற காலங்களில்கூட தமிழ் பெண்கள் தமது நெற்றிப்பொட்டு வைக்கும் பாரம்பரியத்தினை கைவிட்டிருக்கவில்லை. அவ்வாறான சூழலில் சர்வதேச நியமனங்களின் பிரகாரம் கடவுச்சீட்டு உருவாக்கப்படுகின்றது என்பதற்காக ஒரு இனத்தின் பாரம்பரிய பழக்கத்தையும் வழக்கத்தையும் மாற்ற முயல்வதானது பெரும் தவறான விடயமாகும்.
இந்த விடயம் தொடர்பாக பலதரப்பட்டவர்களும் பெண்கள் அமைப்புக்களும் என்னைத்தொடர்பு கொண்டு பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.
அதனடிப்படையில் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுடன் தொடர்புகொண்டு நெற்றிப்பொட்டு விடயத்திற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.
இந்த நெற்றிப்பொட்டு விவகாரத்தினை ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.
எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி, பிரதமர் இவ்விடயம் சம்பந்தமாக சாதகமான பிரதிபலிப்பினை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்துள்ளேன்.
தமிழினத்தின் பாரம்பரிய செயற்பாடுகளையும் பண்புகளையும் மறுதலிக்கும் எந்தவொரு விடயத்திற்கும் ஒருபோதும் துணைபோவதற்கோ இடமளிப்பதற்கோ முடியாது” என மேலும் தெரிவித்தார்.