பருப்புக்கு ‘கட்டை’ எனப் பெயர் வைத்துள்ள சில மொத்த வியாபாரிகள்: மக்கள் அவசர கோரிக்கை!

நாடு முழுவதும் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தால் விலை நிர்ணயிக்கப்பட்ட சில பொருட்கள் மன்னார் மாவட்டத்தில் உள்ள சில மொத்த வியாபாரிகளினால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மக்கள் முறைப்பாடு அளித்துள்ளனர்.
அத்துடன் அரசாங்கத்தால் விலை நிர்ணயிக்கப்பட்ட சில பொருட்களை விற்பனை செய்யாமல் வியாபார நிலையங்களின் களஞ்சிய பகுதிகளில் பதுக்கி வைத்துள்ளதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
65 ரூபாய் நிர்ணய விலை அமுல்படுத்தப்பட்ட பருப்பு மன்னாரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதுடன் சட்ட நடைமுறைகளில் இருந்து தப்புவதற்காக பற்றுசீட்டுகளில் பருப்பிற்குப் பதிலதாக ‘கட்டை’ என்று பெயர் குறிப்பிட்டு விற்பனை செய்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோன்று 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்ட மீன்ரின் போன்ற அத்தியாவசிய விலை குறைக்கப்பட்ட பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த வியாபாரிகள் பகிரங்கமாக இவ்வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், குறித்த விலை தொடர்பாக கேள்வி எழுப்பும் மக்களுடன் முறையற்ற விதமாக நடந்துகொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் அவர்களுக்கான விற்பனை நடவடிக்கைகளுக்காக வழங்கப்படுகின்ற கொள்வனவு பாஸ் திட்டத்தை நிறுத்திவைக்கவும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், பாவனையாளர் அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.