சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது?

இலங்கையின் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி கொழும்பின் சுதந்திர சதுக்கத்தில் இலங்கையின் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுதந்திரதின நிகழ்வு குறித்து முன்னேற்பாட்டு கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) அனர்த்த முகாமைத்துவம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சில் நடைபெற்றது. இதன்போதே, சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாட முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், அனைத்து அமைச்சுக்கள், கொழும்பு மாநகரசபை மற்றும் முப்படையின் பங்களிப்புடன் சுதந்திரதின நிகழ்வை நடத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரும்புவதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் சுதந்திர தினத்தையொட்டி மரம் நடும் திட்டத்தையும் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசு பதவியேற்றதன் பின்னர், 2016ஆம் ஆண்டில் காலி முகத்திடலில் நடைபெற்ற 68ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் முதன்முறையாக தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.