கனடா சர்வதேச கண்டுபிடிப்புகள் போட்டியில் இலங்கையரின் கண்டுபிடிப்புக்கு தங்கப் பதக்கம்


2022ஆம் ஆண்டுக்கான சர்வதேச கண்டுபிடிப்புகள் போட்டி கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் 81 நாடுகளைச் சேர்ந்த 700 கண்டுபிடிப்பாளர்கள் போட்டியில் பங்குபற்றியிருந்தனர். இதில் இலங்கையைச் சேர்ந்த குரேம்பலா ரலாலாகே சதுர மதுமல் என்ற பல்கலைக்கழக மாணவரின் கண்டுபிடிப்புக்கு தங்கப் பதக்கம் மட்டுமன்றி இந்த ஆண்டின் உலகின் சிறந்த 20 கண்டுபிடிப்புகளின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.
ரத்மலானை சேர் ஜோன் கொத்தலாவை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டில் கல்வி கற்று வரும் இவர் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த பிந்தங்கிய கிராமத்தில் இருந்து இக்கண்டுபிடிப்பைச் செய்தமை பாராட்டக்கூடிய விடயமாகும். இவர் உருவாக்கிய சப்பாத்தை அணிந்து நடக்கும் போது 20 செக்கன்களில் கைத்தொலைபேசியை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். இது வரை பல நிறுவனங்கள் கைத்தொலைபேசியை சார்ஜ் செய்யும் பல கண்டுபிடிப்புகளைச் செய்து வணிகமயப்படுத்தினாலும் அதற்கு பல நிமிடங்கள் தேவைப்பட்டன. ஆனால் இக் கண்டுபிடிப்பு வெறும் 20 செக்கன்களில் கைத்தொலைபேசியை முழுமையாக சார்ஜ் செய்ய உதவுகின்றது. என்பது விசேட சிறப்பம்சமாகும்.
கண்டுபிடிப்பாளர் சதுர கருத்து தெரிவிக்கையில் ” எரிசக்தி மற்றும் மின்சக்தி துறையில் நிலைபேறான திட்டங்கள் எமது நாட்டில் இல்லை என்பது எமது நாட்டின் எதிர்கால பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திடும். தற்போது நமது நாடு எதிர் கொண்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கும் அதுவே பிரதான காரணம். நான் கைத்தொலைபேசியை பயன்படுத்தும் போது அடிக்கடி அதனை சார்ஜ் செய்ய பல மணித்தியாலங்களை செலவு செய்துள்ளேன். அதனால் பயணம் செய்யும் போது கைத்தொலைபேசியை விரைவாக சார்ஜ் செய்ய பல பரிசோதனை மாதிரிகளை உருவாக்கினேன். ஆரம்பத்தில் எனது சைக்கிளில் இம்மாதிரியை பரிசோதனை செய்தேன். அதில் வெற்றியும் அடைந்தேன். எனினும் சைக்கிள் எப்போதும் எம்முடன் இருப்பதில்லை. அதனால் பாதணிகளில் இத்திட்டத்தை மாற்றியமைத்தேன். இதுவரை 67 பாதணிகளை இதற்காக வீண் செய்தேன். பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த ஆய்வை கைவிட்டேன். கடந்த வருடம் தேசிய கண்டுபிடிப்பாளர் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் மற்றும் பணப்பரிசு பெற்றேன். அதில் கிடைத்த பணத்தை வைத்து மேலும் எனது ஆய்வை விரைவுபடுத்தினேன். அதில் 20 செக்கன்களில் கைத்தொலைபேசியை முழுமையாக சார்ஜ் செய்ய உதவும் “வேக்கிங் சார்ஜர்” ஒன்றை கண்டுபிடித்தேன். கனடாவில் நடைபெற்ற சர்வதேச கண்டுபிடிப்புகள் போட்டியில் பங்குபெற்றுவதற்கு எனக்கு இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு முழு அனுசரணை வழங்கியது. அவர்களுக்கும் இவ்விடத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை 3 சர்வதேச நிறுவனங்கள் எனது கண்டுபிடிப்பை வணிகமயப்படுத்துவதற்கு முன்வந்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்களுக்கு எரிசக்தி மற்றும் மின்சக்தி தொடர்பான ஆய்வுகளை நடாத்த வேண்டும். அரசும் அதற்கு உதவிகளைச் செய்ய வேண்டும். இல்லையெனில் எமது நாடு எதிர்காலத்தில் இருளில் இருக்க வேண்டி வரும்.”
சர்வதேச கண்டுபிடிப்புகள் போட்டியில் 9 பிரதான பிரிவுகளில் ஒன்றான மின்சக்தி சேமிப்பு துறையில் தங்கப்பதக்கத்தை இலங்கையைச் சேர்ந்த சமது மதுமலுக்கும், வெள்ளிப் பதக்கத்தை பிரித்தானியாவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளருக்கும் மற்றும் வெண்கலப்பதக்கத்தை சீனாவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளருக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதனை கனடா கண்டுபிடிப்பாளர் ஒன்றியத்தில் தலைவர் பேராசிரியர் மூன்சங் சாங் வழங்கி வைத்தார்.
சதுர மதுமலை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் உள்ள இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவில் நடைபெற்றது. இதில் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவில் ஆணையாளர், பணிப்பாளர் மற்றும் இலங்கை புத்தாக்குனர்கள் கழந்து கொண்டு கௌரவிப்புச் செய்தனர்.