இலங்கை

யாழ்.பல்கலைக்கழக மாணவனின் மரணத்தில் சந்தேகம் : இரத்த மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவன் ஒருவர் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடிய சம்பவங்கள் எதுவும் நடந்திருக்கவில்லை எனவும், மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

வடமராட்சி கிழக்கு, நாகர்கோயில் தெற்கைச் சொந்த இடமாகவும், பருத்தித்துறை, துன்னாலை வடக்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் இளங்குன்றன் (வயது – 23) என்ற மாணவனே நேற்றுப் பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த மாணவன், கோண்டாவில் கிழக்கு, வன்னியர்சிங்கம் வீதியில் வாடகை வீடொன்றில் தங்கி தமது பல்கலைக்கழகக் கற்றல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று விரிவுரைக்குச் சமுகமளிக்காததால் அவருடைய சக மாணவர்கள் தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்டனர். தொடர்சியாக அழைப்புகளை மேற்கொண்டபோதும் அவர் பதிலளிக்காததால் சந்தேகமடைந்த சக மாணவர்கள், அவர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றனர்.

ஆனால், அங்கு அவர் தங்கியிருந்த அறை பூட்டியவாறு காணப்படவே, குறித்த மாணவர்கள் கதவை உடைத்து உட்சென்று பார்த்தனர். அப்போது அங்கு இளங்குன்றன் யன்னல் கம்பியில் கட்டப்பட்டிருந்த கயிறு ஒன்றில் தொங்கியநிலையில் சடலமாகக் காணப்பட்டார்

இது தொடர்பில் உடனே பொலிஸாருக்குத் தகவல் அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார், அவரின் சடலத்தை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

குறித்த மாணவன் உயிரை மாய்த்துக்கொள்ளக்கூடிய சம்பவங்கள் எதுவும் நடந்திருக்கவில்லை எனவும், மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை சடலத்தைப் பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரி மயூரன், கழுத்து இறுகியதால் மரணம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்தார்.

எனினும், மாணவனின் இரத்த மாதிரியைப் பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் கொண்ட பொலிஸாரும் அவரின் இரத்த மாதிரியைப் பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இளங்குன்றனின் உடல் நேற்றிரவு யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் பல்கலைக்கழக சமூகத்தினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து அவரது உடல் பருத்தித்துறை, துன்னாலை வடக்கிலுள்ள உள்ள அவருடைய இல்லத்துக்கு மருத்துவபீட மாணவர்களால் கொண்டு செல்லப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker