கண்ணகி கிராமத்தில் யானை அட்டகாசம்: நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கையும்! விசனமும்….

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கண்ணகி கிராமத்தில் காட்டு யானைகள் நேற்றய தினம் (17) இரவு 2.00 மணியளவில் குடியிருப்பு பகுதிகளில் உற்புகுந்து பயிர் நிலங்களை சேதப்படுத்தி அட்டகாசம்.
கண்ணகி கிராம பகுதியில் சுமார் 650 குடும்பங்கள் வசித்துவருவதுடன் குறித்த பகுதியில் அண்மைக்காலமாக இப்பகுதிகளில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதுடன் மக்கள் குடியிருப்பு பகுதியில் உட்புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இரண்டு வருடங்களுக்கு முன்பு குறித்த காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு பெண் பிள்ளைகளின் தாயான குடும்பபெண் ஒருவர் உயிரிழந்து கிராம மக்களை சோகத்திற்கு உள்ளாக்கியமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இருக்கின்ற நிலையில் குறித்த காட்டுயானைகள் மக்கள் குடியிருப்புக்கள், பயிர் நிலங்கள் என பலவற்றை தொடர்ந்தும் சேதப்படுத்தி வருகின்றது. மேலும் இவ்வாறு இரவு நேரத்தில் திடீரென வீட்டிற்குள் நுழைகின்ற காட்டுயானையினால் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இவ்வாறான பல பாதிப்பான விடயங்கள் இடம்பெற்று வருகின்றதுடன் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.